15 November, 2021

ஓங்கில்களுடன் துள்ளுதல்


 

மௌனத்தை நேசிப்பவள்
விரும்பித் தேர்கிறாள்
பலரும் சலிப்பு கொள்ளும்
வேலைகளை.
அவற்றைச் செய்கையில்
திறந்து கொள்கிறாள்
எங்கெங்கோ அழைத்துச் செல்லும்
சுரங்கங்களை.
பூண்டு உரிக்கும் போது
பிறை அலையும்
கடற் பரப்பில்
ஓங்கில்களுடன் துள்ளுகிறாள்.
வாழைப்பூக்களின்
நடுப்பகுதி கிள்ளி
மடல் மேல் இடுகையில்
அரக்குப் படகொன்றில்
நாரைகளுடன்
பயணிக்கிறாள்.
இஸ்திரி முடித்து
துணியை அடுக்குகையில்
படகை விட்டிறங்கி
பெருநதியை மடிக்கிறாள்.
குளிராடை பின்னுகையில்
மழை வனத்தின்
வேர்ச் சடைகளில்
கன்னம் வைத்துக் கிடக்கிறாள்.
பிறகு அவள் சொல்கிறாள்
மௌனம் என்பது பேசாதிருப்பதல்ல;
எவருக்கும் கேட்காமல்
பேசிக் கொண்டே இருப்பது.

விட்டு விடு


 

தம்பி!!!
விட்டு விடுவாயா..
எதை அஞ்சியோ
சுருண்டிருக்கும் மரவட்டையை
குச்சியால் நகர்த்துவதை..
கேரம் வில்லை போல்
சுண்டிப் பார்ப்பதை..
எனக்கு
விண்மீன்களைத்
தன்னுள் அடுக்கி
மௌனமாய்ச் சுழன்றிருக்கும்
பால்வெளியின் அச்சு பிசகி
பிரளயம் வருவது போல்..
நடுக்கமாய் இருக்கிறது

நான்காம் இதழ்

 


எச்சில் ஒழுகச்

சிரித்தபடி 

தவழ்ந்து வருகிறது

உதட்டுப் பிளவு கொண்ட குழந்தை.


குனிந்து எடுத்து

வாஞ்சையாய் 

 வருடுகிறேன் 

மழை ஒழுகும்

பன்னீர்ப் பூவின்

முனை பிளந்த 

நாலாம் இதழை


10 November, 2021

சொல் வண்ணம்


 


அவ்வப்போது கவிதைகளில்
அமர்ந்து கொள்வதுண்டு
பிடித்தவர்களுக்குப் பிடித்த
சொல்லும் நிறமும்.

அம்மாவின் சொல்லுக்கு
அரக்கு நிறம்
அணைத்துக் கொள்கிறேன்.

அப்பாவின் சொல் என்றும்
வெண்மைதான்
வியந்து போகிறேன்.

தங்கையின் சொல்லுக்கு
வாடாமல்லி நிறம்
தடவிப் பார்க்கிறேன்.

கணவருக்குப் பிடித்த
கருநீலச் சொல்லுடன்
காதலுறுகிறேன்.

மகளின் சொல்லுக்கு
இளஞ்சிவப்பு நெற்றியுண்டு
முத்தமிடுகிறேன்.

மிகப்பிடித்த கவிஞரின்
மிக ரசித்த சொல்லை நிறத்தை
வணங்கி நிற்கிறேன்.

கச்சிதமாய்ப் பொருந்தியும்
கவனத்துடன் தவிர்க்கிறேன்
பிடிக்காத ஒருவர்
புழங்கும் சொல்லை.

சொல்லாத அச்சொல்
சுமந்து நிற்பது என்
வன்மத்தின் வண்ணமன்றோ
சுருங்கிப் போகிறேன்.

இன்னொரு புள்ளி


 

கோலப் புள்ளிகளிடை
குப்புற விழுகிறது
பவளமல்லி.

விடியுமுன் கோலமிடும்
வெள்ளெழுத்து கொண்ட அத்தை
கண்ணாடி அணிந்து வந்து

கம்பிக்கோலம் தொடர்கிறாள்.


பக்கத்திலிருக்கும்
புள்ளியுடன் பூவைச் சேர்த்து
இழை ஒன்றைச் சுழிக்கிறாள்.

சமயலறைச் சன்னல் வழி
சலனமற்றுப் பார்க்கிறாள்
மாமாவின் இன்னொரு மனைவி. 

ஆட்கள் தீர்ந்து போன அறை


 

வண்ணப் பொடிகள்
தீர்ந்து போகும் காலைகளில்
குறுக்கும் நெடுக்குமாய்
சரசரவென இழைகள் வரைந்து
கோலத்தின் பூவிதழ்களை
நிரப்புவாளாம் பாட்டி.

இன்றும் அப்படித்தான்..
ஆட்கள் தீர்ந்து போன
அறை ஒன்றினுள் அமர்ந்து
இழைத்துக் கொண்டிருக்கிறாள்
சொற்களை.

ALL OR NONE


 

இருக்கலாம் என்றாய்
ஆம் அல்லது இல்லை சொல்
என்றேன்.

முயலலாம் என்றாய்
செய் அல்லது செய்யாதே
என்றேன்.

நலிவல்ல என்றாய்
நன்று அல்லது நன்றன்று,
நவில் என்றேன்

சமநிலை பேண்
என்கிறாய்
தெளிவு அல்லது பிறழ்வுற்றே
திரிகிறேன்.

"எப்போதும் உனக்கு
எல்லாம் அல்லது
ஏதுமில்லை தானா?"
பிணங்குகிறாய்.

அண்ட சராசரமும்
அப்படித்தானே என்கிறேன்

போதும்


 


மழையிரவின் விளையாட்டில்
நட்சத்திரத்தைக் கோரியது
குழந்தை.

திரையின் வழியே
சுடரைப் பார்..
ஊடும் பாவும்
ஒளியைச் சிதறடித்து
விண்மீனை உருவாக்கும்
விந்தை தெரியு மென்றேன்

இத்தனை மெனக்கெடலா?

இமைகளைச் சுருக்கினால்
போதும், பார்
என்றது குழந்தை

போல் இருப்பவர்கள்


 



பெண்களின் வாழ்வில்
அடிக்கடி தென்படுகிறார்கள் 

அப்பாவைப் போல்

இருப்பவர்கள்..

அப்பாவின் உயரம்
அப்பாவின் உடல்வாகு

அப்பாவின் சருமச் சாயை
அப்பாவைப் போல் முடி
அப்பாவின் குரல்

அப்பா அணியும்
சட்டையின் நிறம்
அப்பாவின் இருசக்கர
வாகனத்தின் சத்தம்..

அப்பாவின் பணிவு
அப்பாவின் சுறுசுறுப்பு
அப்பாவின் தளர்நடை

சில நேரங்களில்
அப்பாவின் கண்ணீரை விடக்
கலக்கம் கொள்ளச் செய்யும்
அப்பாவைப் போல்
இருப்பவரின் கண்ணீர்.

அம்மாவைப் பற்றி கேட்கிறீர்களா?
அம்மாவைப் போல் இருப்பவர்கள் தேவைப்படுவதில்லை.

நொறுங்கி விழப்
போதுமானதாய் இருக்கிறது,
எதற்காவது
அவ்வப்போது தோன்றும் "அம்மாவுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்"
என்ற எண்ணம்.

ஒற்றைச் சொல்


 


மனதின் நிலைக்கேற்ப
மாறி விடுகிறது
மழை விழும் நீர்ப்பரப்பு.

வட்டத்தின் வெளியே
நின்று பார்த்தால்
மதுரக் காதலுறு
மணப்பெண்ணின்
மயிர்க்கூச்சம்.

வட்டத்தின் உள் நின்று
வெறித்தால் அது
போதையுற்றவன்
பிறழ்நிலையிற் பொறித்த
ப்ரெய்லிக் காகிதம்.

வட்டம் என்பது வட்டமல்ல
மனம் சூம்பும் வண்ணம்
எவரோ செய்த செயல்.
பல வேளைகளில் அது
ஒற்றைச் சொல்.

08 November, 2021

நீல அனிச்சம்


 


அன்புடையீர்
எனக்கு ஒரு
மன்றாடல் உண்டு.

பிள்ளைப் பேறு கண்ட
பச்சை உடம்புக் காரிக்கு
ஒரு போதும் புகட்டாதீர்
வெறுப்பில் தோய்த்த சொற்களை.

அதன்பின் அவள்
விழிகளில் அணிகிறாள்
நீலச் சாயை கொண்ட
கண்ணாடியை.

நீல உதிரம் போக்குகிறாள்
நீலப் பால் சுரக்கிறாள்.
நீல அனிச்சம் ஆகிறாள்.

நீலத் தழலின் மேல்
நீலநிற உணவு சமைத்து
நீலத் தட்டிலிட்டு உண்ணுகிறாள்.

வருடங்கள் கடந்த பின்பும்
வளைகாப்பில் தோழிக்கு
நீல வளையலிட்டு
நீலக் கன்னங்களில்
விரல்கள் நடுநடுங்க
நீல நலங்கு பூசுகிறாள்.

புரிந்து கொள்ளுங்கள்..
இளங்காலை வான் போல்
எளிதில் வெளுப்பதில்லை
அவளது
நீலச் சிற்றறையின்
நீல ஒளி. 

.......





எத்தனை கூர்மையானது
உனது மூளை!!
அத்தனை துல்லியமாய்
அனுப்புகிறது
புன்னகைக்க உதவும்
முகத்தின் தசைகளுக்கான
சமிக்ஞைகளை.
ஒரு பூ மலர்வது போல்
உதடுகளின் மையத்தில் தொடங்கி
அற்றம் வரை பயணிப்பது
உண்மையில் உதிக்கும் புன்னகை.
விளையாடும் பிள்ளையை
வீட்டுக்கு இழுப்பது போல்
இதழ்கள் இணையும் முனைகளை
இருபுறமும் இழுப்பது
வலிந்து நீ புரியும்
வெற்று நகை.
எத்தனை நுட்பமானது
எனது மனதும்!
புன்னகைகளின் வகைகளைக்
கண்டு அறிவிக்கிறது
விழித்திரைக்கு.
முகமூடியல்லாத
முகமூடியாக
இரண்டாவது ரகப் புன்னகையை
நீ அணிகிறாய்.
மனதால் நான்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

....


 

இயந்திரம் உமிழும் குமிழிகளின்
வடிவத்தை மாற்ற
இயற்பியலின் அனுமதி
இல்லையென்றறிவேன்‌

உணவாய் நீங்கள் இடும்
குளிகைகளின் வடிவத்தையாவது
மாற்ற முடியுமா?

ஆம்!
தங்களது வரவேற்பறைத் தொட்டிக்குள்
எது எதுவென்றறியாது
குழம்பி நீந்தும்
குஞ்சு மீனுக்காகத்தான்
கேட்கிறேன்.

புத்தனின் பாடல்


 

மழைக்காலத்து
புத்தனின் மேல்
படர்ந்திருக்கும் பாசி.

கழுத்து மடிப்பின்
பச்சையத்தில் பொலிவது
அங்கில்லாத மூங்கிலின் கணு.

கவிழ்ந்த இலை போல்
இடை வீங்கி
முனை கூர்ந்த இமைகள்.

குழை களைந்த
நீள் செவியின் துளைகளுக்குள்
நுழைந்து நீங்கும் காற்றுக்கு
புல்லாங்குழலின் ஞாபகம்.

எனக்கும் கேட்கிறது
வாய் திறவாது
முணுமுணுவென
புத்தன் இசைக்கும்
பாடல்.


 

தாமதமாய் வந்த
தந்தையுடன் பிணங்குகிறாள்
தொட்டாற்சிணுங்கி
இலை நேர்த்தியை
பிரெஞ்சுப் பின்னலில் ஏந்தியவள்.

ஊரில் பூத்த
அதே செடியின்
இளஞ்சிவப்புக் குஞ்சங்களை
பின்னலின் நுனியில்
பிணைக்கிறான்
நுழைவுச்சீட்டு கிழித்து
திரையரங்கினுள் அனுப்புபவன்.