23 August, 2021

........


 

பெருந்தொற்றுக் காலத்து
திருமண வரவேற்பில்
கவசங்களினூடே
அம்மாவின் முகம் தேடும்
குழந்தை.
இலையுதிர்காலத்து
ஏரிக்கரையில்
மேப்பிள் சருகுகளிடை
தத்தித் தத்தித்
தன் பாதம் தேடும்
வாத்துக்குஞ்சு.


15 August, 2021

செம்மஞ்சள் இடைவேளைகள்


அரங்கேற்ற இடைவேளையில்
மேடையின் ஓரம் நின்று
செம்மஞ்சள் வாணவேடிக்கை காணும்
குட்டி நர்த்தகி
அனிச்சையாய் சரிபார்க்கிறாள்
தலையிற் பொருத்திய
சூரியப் பிரபையை.
தோரணச் செவ்வந்தியின்
இதழடுக்குகள் காண்பவன்
வாஞ்சையுடன் நீவுகிறான்
மடங்கி மடங்கி விரியும்
ஆர்மோனியத்தின் துருத்தியை.
சற்று நேரம் இளைப்பாறிய
கல்தூண் துர்க்கை
மீண்டும் உயர்த்தி விரிக்கிறாள்
செந்தூரத் தடக்கைகளை.

கப்பல்

 


மகிழுந்துகள் ஓய்ந்திருக்கும் 

அடுக்ககத்தின் அடித்தளத்து 

மூலை ஒன்றில் 

வண்ண வண்ணக் கடல்கள் மீது 

அப்பா கப்பல் ஓட்டுவதாய் 

தாயிடம் சொன்னான் 

இஸ்திரிக்  காரரின் மகன்.


அடுத்த வைகறையில் 

அம்மாவும் அப்பாவும் 

கப்பலின் கூரை  திறந்து 

பிட்டுப் பிட்டு அடுக்கினர் 

கருஞ்சாம்பல் படர்ந்த சூரியனை. 

ஆதிச்சுடர்

 


இருகை இணைந்து
இலை போலாகிட
முதிர்ந்த ரேகை தழுவி
மூலம் சேரும்
பித்தன் அள்ளியள்ளி
பெருநதியில் உகுக்கும் நீர்

செரித்த சூரியனை
செம்மஞ்சள் சுடர்களாக்கி
வான் நோக்கி மீண்டும்
வார்த்திட முனையும்
கரையினின்று கண்டிருக்கும்
கல்வாழை.

13 August, 2021

ஒன்று



 




சாலையின் ஒருபுறம் 
வானம் கலந்த 
பாசிச் சதுப்பு நீரிலும் 
மறுபுறம் நெடிதுயர்ந்த 
அலுவல் கட்டடத்துக்
கண்ணாடியிலும் 

ஒன்றே போலத் 
தெரிகிற திந்த 
கோலிகுண்டுப் பசுநீல 
நிறம் .

ஒன்றில்  போலவே 
விழுகின்றன 
மேலிருந்து கீழும் 
மேற்கிருந்து கிழக்கிலும் 
சூரியனின், வெண்முகிலின் 
பிம்பங்கள்.

ஒன்றே போன்ற 
ஒன்றல்லாத மோனத்தில் 
நீரில் நிற்கும் 
செங்கால் நாரையும் 
கட்டடத்துழலும் 
சாம்பல் புறாவும். 

ஒன்றாகவே 
பயணிக்கிறோம் 
எனது தீராச்  சலனங்களைப் 
புறக்கணித்துப் 
பழகிய  நீயும் 
உனது மாறா நிச்சலனத்தில் 
அதிர்ந்து அதிர்ந்து 
பழகும் நானும்.

இதயம்




 உறுப்பு மாற்று 
சிகிச்சையில் அகற்றப்பட்ட 
இதயத்தைப் பார்த்தாள் இனியா.

"அம்மா, இதயம்  ஏன் சிவப்பாய்  இல்லை?"

"இது பதப்படுத்தப்பட்டது "

"அம்மா,
ஓவியங்களில் காண்பது  போல் 
இதயம் ஏன் smooth- ஆக  இல்லை"

" உண்மையில் 
இதயங்கள் smooth- ஆக இருப்பதில்லை 
பழகிக் கொள் மகளே"

வாடாமல்லியும் தொட்டாற்சிணுங்கியும்


வாடாமல்லிகள் பூக்கின்றன

எவரின் பார்வையும்

தப்ப இயலாத

அடர்நிறத்தில்..

சற்றே கனமாய்..


தொட்டாற்சிணுங்கிகளும் பூக்கின்றன

கவனம் கோராத

அதே நிறத்தில்..

அத்தனை இலகுவாய்..


ஒரு வாடாமல்லியை

உணர்ந்து கொள்ள

கவனம் முழுவதையும்

கட்டை விரலில் 

குவித்தல் வேண்டும்.


தொட்டாற்சிணுங்கிப் 

பூவுக்குப் போதும்

ஒரு பூனைக்கான 

மென்வருடல்.


முன்னதுடன் எனக்குத் 

தோன்றும் ரசனை.

பின்னதுடனோ ஒரு

பெரும் சினேகம்.

பூக்காது போவதில்லை தொட்டாற்சிணுங்கிகள்.


 

பூக்காது போவதில்லை
தொட்டாற்சிணுங்கிகள்.
அவை
பூத்துக் கொள்கின்றன
அதிகம்பேர் மேவாத
சிறுமலைப் பாதைகளில்.
அசைந்து கொள்கின்றன
அசையாது அசையும்
காற்றோடு காற்றாய்.
பூரித்துக் கொள்கின்றன
மோனத்தில் சிலிர்க்கும்
புறாவின் கழுத்தினின்று
புசுபுசுத்த இள ஊதாவை
எடுத்தணிந்து.
பிணைத்துக் கொள்கின்றன
யுகாந்திரங்கள் தாண்டி
தகதகத்து நீளும்
சூரியனின் ஆரங்களுடன்
மென்மெல்லிய தம் பூவிரல்களை.
அவை
அறிந்தவை போலிருக்கின்றன
பூக்கும் பூக்களிடை
பூத்துக் கொள்பவை
பேரழகென.

சுடர்


 வாதம் கண்ட

பாட்டியை இருத்தி

தலை சீவிப் பூமுடிக்கும்
பேத்திகள் குழு.

கார்காலத்து மரத்தடியில்
சருகை நிமிர்த்திச் சுடராக்கும்
சிற்றெறும்புக் கூட்டம்.

வண்ணதாசம்

 


கான்கிரீட் காட்டினூடே

கருமை மினுங்கும் சாலையில்
குளிரும் மகிழுந்தின்
சன்னல்வழி காண்பதெல்லாம்
நெடுவானில் அல்ல அல்ல
நீலக் கண்ணாடிகளில்
மிதக்கும் முகில்கள்.
குறையில்லை,
எனக்குண்டு ஒரு பதுங்குகுழி.
பதுங்குகுழி அல்ல அல்ல
பேரன்பை முகிழ்த்தும்
பெருங்கவியின் முகநூலில்
எனக்குண்டு ஒரு
பிரியமான பல்லாங்குழி.
சோழிகள் அல்ல அல்ல
சின்னஞ்சிறு இதயங்கள்
என் உள்ளங்கைக்குள்.
ஒவ்வொரு கவிதைக்குமொரு
இதயச் சோழி.
விருப்பக்குறியின் மேல்
விரல் அழுத்திப் பிடிக்கையில்
"டிட்டிட்டிர்" என
உள்ளங்கைக்குள் சோழிகள் ஒன்றோடொன்று உரசும்
அல்ல அல்ல, அது
ஊர்க்குளத்தில் தவளைக்குஞ்சு
மழைக்குப் பேசும் சத்தம்.
விரலை நகர்த்தி
இதயத்தைச் சொடுக்குகையில் பல்லாங்குழிக்குள் கேட்கும் ஒரு "ப்ளக்"..
ப்ளக் வெறும் ப்ளக்
அல்ல அல்ல, அது
பிராஞ்சேரி அல்லிக்குளம்
பின்னாலேயே ஓடிவந்து
என்னுள் கல்லெறியும்
சத்தம்.
- காலைகளின் அழுத்தத்தை மாற்றி கவிதைகளால் அவற்றை நிறைக்கும் வண்ணதாசன் ஐயாவுக்கு அன்பு ❤️❤️❤️

உனக்குப் பிடிக்கிறது


 வீட்டினுள் வளரும்

தொட்டிச் செடிகளை
உனக்குப் பிடிக்கிறது.
நிபந்தனைகள் அற்றவை அவை.
சமரசங்களை உறிஞ்சியே
உயிர்த்திருப்பவை.
ஒளிச்சேர்க்கைக்கு
சூரியனைக் கோராதவை.
அழகாய் வலை பின்னி
அதனுள் தொட்டி வைத்து
அந்தரத்தில் மண்ணை நிறுத்தி
நட்டாலும் தழைப்பவை.
வட்டம் சதுரம் ஒற்றை பூட்ஸ்
வடிவம் எதனுடனும்
பேதமில்லை
மண் இல்லையெனில்
தண்ணீர் மட்டும்..
உப்பி மினுங்கும்
சிலிக்கா மணிகளும்
பாதகமில்லை.
தானே வீசினால்தான்
காற்றா என்ன?
உனது குளிரூட்டியின்
அசையும் தகடுகள்
அசைப்பதும் அதைத்தான் என
அங்கீகரித்துப் பழகியவை.
உனக்குப் பிடிக்கிறது
வீட்டினுள் வளரும்
தொட்டிச் செடிகளை.
எனக்கு அவற்றின்
மெல்லிய முட்களை...
கிள்ளும் போது
பெருகாது கசியத் தெரிந்த
பச்சை நிறக் கசப்பை.

நன்றி தமிழ்வெளி இதழ்