20 January, 2021

பேரமைதியைப் புசிக்கும் புறா


பேச யாருமற்ற
பிறழ் மனசுக்காரி
சன்னலருகில் வைத்தலுண்டு
மௌனத்தில் புரட்டிய
நெல்மணிகளை.

செம்மஞ்சள் பெருவட்டத்துள்
சின்னதொரு கருவட்டமாய்
வீட்டுப்புறாவின் விழியில் சுழலும்
தகித்துத் தீர்ந்த 
தாரகையின்
கருந்துளை.

பிரபஞ்சத்தின்
பேரமைதியை அது
கொத்தி விழுங்குகையில்
பட்டுக் கழுத்தில் ஒளிரும்
இளஞ்சிவப்பு, ஊதா மற்றும்
கரும்பச்சையில்
துருவ ஒளி.

நன்றி: தமிழ்வெளி இதழ் 

விடுதலை


 காரினுள் தவறி நுழைந்த வண்ணத்துப்பூச்சி 

எங்ஙனம் கணக்கிடும் 

பறத்தலின் விசையை?


காரை மிஞ்சினால் முன்புறமும் 

வேகம் குறைத்தால் பின்புறமும் 

கண்ணாடி முட்டி வீழுமோ? 


காரின் சரிவேகம் வேண்டுமோ  

வெறுமனே மிதந்தால் போதுமோ?

வளைவுகளில் என் செய, அறியுமோ?


வெய்யிலில் திரிந்ததற்குக் 

குளிர்பதனம் ஆகுமோ?

தோல் மணக்கும் எனது கைப்பை 

தோன்றுமோ பெரும்பழுப்புப் பூவென?


மூச்சு முட்ட முட்ட 

திறந்துவிட்டேன் சன்னலை.


வெளிர்நீலப் பூவாய் வான் மலர 

வெளியேகிப் படபடத்தது மென்சிறகு

பெரு வணிகர் வீட்டின் 

பிறந்தநாள் விருந்தினின்று 

விரைந்து வெளியேறும் 

பணிப்பெண்ணின் கண்கள் என. 

நான் போதுமானவள்

 


ஒருபோதும் முடிவதாயில்லை

போதாமைகளின் பட்டியல்...


சான்றுக்கு மூன்று சொல்வேன்

சான்றோர் கேட்க.


பிம்பம் எனதைத் தீட்டும்

பெருஞ்சித்திரக் காரருக்கு

போதவில்லை எனது நிறம்..

மழை நனைத்த மண்ணின் நிறமெனக்கு

மண்துளைத்த வேரின் நிறமெனக்கு.

இதமான தேநீரின் நிறமெனக்கு

இனிதான தெளிதேனின் நிறமெனக்கு

இதயத்தின் தசைநார்களின் நிறமெனக்கு.

விசை பெருகப் புயலின் மிசை

விண்ணளக்கும் கழுகின் நிறமெனக்கு.

நான் போதுமானவள்.


பதறிப் பதறி எனைப்

பட்டை தீட்டும் கொல்லருக்கு

போதவில்லை எனது மினுக்கம்.

உதறிச் சென்றமிழ்வேன்

ஓசையற்ற நதியடியில்.

கிரீடத்தில் ஒளிரும் வைரமல்ல;

கன்னத்தில் குளிரும் கூழாங்கல் நான்.

நான் போதுமானவள்.


எரிவாயு அடுப்பிடம்

நீலத்தழல் நாக்கள் வாங்கி

நாளும் வெறுப்பு செயும்

நளராஜ சீடருக்கு

போதவில்லை எனது உணவின் ருசி.

சின்னஞ்சிறு  சுடரொளியில்

கவிதை சமைப்பவள் நான்.

நான் போதுமானவள்.


அவர் அளவையில் நான்

போதாமைகளின் பேரணி.

எனதளவில் நான்

எது குறையினும் பூரணி.


கண்


 

கைப்பேசி வரைபடத்தில் 

பச்சையும் நீலமுமாய் 

சுழன்றது பெரும்புயலின் நகர்வு.


"மயில் தோகை மாதிரி 

இருக்குதும்மா" என்றாள் 

ஆறு வயது தங்கம்மா.


புயலின் கண்ணில் நின்றபடி 

சற்றுநேரம் 

மயிலின் கண் 

கண்டிருந்தோம்.

ஆழியின் மகரந்தம்

                                                         

 

பூக்களை மட்டுமே 

புகைப்படம் பிடிப்பவன் 

கடல் பார்த்துத் திரும்புகிறான் 

ஒற்றை அலையின் படத்துடன். 


மலர்ந்த நாகலிங்கத்தின் 

மகரந்த முக்காடு போல் 

ஒயிலாய் வளையும் ஒற்றை அலை.


கடலினுள் இறங்கும் கதிரவனின் 

செம்மஞ்சள் பூசிச் சிதறும் 

மகரந்தத் துகள்களென 

நீர்த்துளிகள். 


ஆழியை மடித்து மடித்து 

அல்லிவட்ட  இதழ்கள் செய்யும் 

ஓரிகாமி அறிந்த 

சிறுமி இக்கவிதை. 


நன்றி: யாவரும்.காம்