Showing posts with label அகநாழிகை. Show all posts
Showing posts with label அகநாழிகை. Show all posts

12 June, 2010

காரணமின்றி..


அந்த
மிகுமழை இரவின்
மின்தடைப் பொழுதில்..
இருள் கண்டு மருண்டவளில்லை நான்..

கண்பார்த்துக் கதைத்திருக்க
கதைகளோ கதைப்போரோ
உடனிருக்கவில்லை.

குழந்தைமை தொலைத்தவர்க்கு
வீட்டுப்பாடம் செய்யவோ
விரல்களின் நிழல் கொண்டு
விளையாடி இருக்கவோ
விதிகளின்படி அனுமதியில்லை..

பாராமுகம் தாளாமல்
பகலிலேயே வெளியேறியிருந்தாள்
வழக்கமாயென் கவிதைகட்குப்
பாடுபொருள் தருவிக்கும் சிறுமி..

உறைந்திருந்த நினைவுகளைச்
சூடேற்றி விழுங்க
மௌனத்தின் வெம்மையே
போதுமாயிருந்தது..

எனினும் காரணமின்றி
எரிந்தபடி யிருந்தது
மெழுகுவர்த்தி..

நகர்த்துகையில் விரல் படிந்த
இரு துளி மெழுகை
இலகுவாய்ப் பிரித்தெடுத்தேன்
வெளிறிய பூவிதழென..

ஏனோ அது ஒத்திருந்தது
சுடர் தீண்டித் துடித்தடங்கிய
ஈசலின் மென்சிறகை.

காரணமின்றி நிகழ்ந்திருந்தது
அதன் மரணம்
உன் நிராகரிப்புகள் போலவே.
நன்றி அகநாழிகை

07 April, 2010

நிழல் பற்றியவை


மின்தடைக்கு வேர்த்திருக்கிறது
மெழுகுவர்த்தி..
வாசலை அண்டி நிற்கும்
வன்மழை நனைத்த நாய்க்குட்டியைத்
துரத்தும் மனமில்லை எவர்க்கும்..
சற்றைக்கெல்லாம் தயக்கம் துறந்து
உட்சுவரெங்கும்
உலவத் தொடங்குகிறது
வால் குழைத்தபடி
மழையின் நிழல்.

***

ஊதியணைக்கப்படும்
சுடரின் நடனத்தில்
ஒரு கணம் உயிர்த்தசைந்து
உடன் மரிக்கிறது
உலோகப் பறவைச்சிலையொன்று.

***

வரைபடத்து நதிகளென
வளைந்தும் கிளைத்துமிருக்கிறது
இலையுதிர்ந்த மரமொன்றின்
இருளோவியம்..
வெயிலின் கரங்கள்
வெகு நேர்த்தியாய் வரைந்திருக்கும்
பாதி மட்டும் மட்டும் கட்டப்பட்ட
பறவையொன்றின் கூட்டில்
மரத்தடியில் நிற்கின்றன
வர்ணம் பூசப்பட்ட கோழிக்குஞ்சுகள்.

***
உயிர்ச்சத்து வேண்டி
கிடத்தப் பட்டிருக்கிறது குழந்தை
மரச்சட்டங்களின் எல்லை நுழையும்
மஞ்சள் வெயிலின் மடியில்...
சுவர் பற்றி மேலேறி
சூரியக்கற்றைகளை வழிமறித்து
சிசுவின் கன்னத்தில் படர்கிறது
சன்னலோரத்துச் சிறுகொடி.

***

இருசக்கர வாகனத்தை
இயக்கும் தோரணையில்
கைவிரல்கள் மடக்கி
வாயில் ஒலியெழுப்பி
கரையிலோடும் சிறுவனின்
கவனமீர்க்க முடியாமல்
மழைக்காலத்து ஏரியை
மௌனமாய்க் கடக்கிறது
விமானமொன்றின் நிழல்.

*
நன்றி : அகநாழிகை

02 June, 2009

கனவின் அல்லிப் பதியன்கள்



துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...

சந்திப்பின் முடிவில்
பசுமையினிழைகளோடும்
வெண்பட்டுக் கூம்பென
விரிந்திராத மொட்டினைக்
கொடுத்துப் போகிறாய்
குழந்தையின் முறுவலுடன்..

அல்லியை விடவும்
அழகாயிருக்கிறது
அதன் தண்டு...
ஈரம் பொதிந்ததாய்..
இதழினும் பளபளப்பாய் ..
இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

தாயின் இடுப்பினின்று
தரையிறங்க நழுவுமோர்
மழலையின் துள்ளலுடன்
மலர்த்தண்டினின்று
மண்நோக்கி வீழ்கின்றன
நீர்த்துளிகளுடன் சில
கவிதைகளும்..

விடியலின் மின்தடைக்கு
விழி திறக்கையில்
எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் கீழ்
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லித்தாளுக்கு...

ஒப்புமையின் உக்கிரம் தாளாது
உள்ளத்தின் பதியன்களை
அழுகையடக்கி அறுத்தெறிகையில்
அடித்தண்டில் சேறென
அப்பிக்கிடக்கும் வலியை
அகற்றும் திறனில்லை
எனக்கு.