24 December, 2010

நிறங்களாலானது


நிலவொளியின் வெண் மடியில்
நீண்டதொரு கவிப்பொழுதில்
நேசத்தின் நிறம் நீலமென்றாய்..
நிர்மல வான் ஆனாய்...

பிரிவுரைக்கும் தருணத்தில்
பிணங்கிய கருமுகிலென
பெருவானைப் போர்த்துகிறாய்
பித்தாக்கும் மௌனங் கொண்டு..

இரக்கமின்றி பொழிந்தும் தீர்க்கிறாய்
நிறங்களற்ற கொடுந்தனிமையை..

செயலற்று வான் வெறிக்கிறேன்
சினந்தொழுகிய கடுமழையில்
சிறகு கனத்து நிற்கும்
செவ்விழிப் பறவையென.

21 December, 2010

அனுமதி

புத்தகப்பை முழுதும்
நண்டுகள் ஊர்வதான
கொடுங்கனவில் வியர்த்தெழுந்த வேளை..
நேசித்த மரமுதிர்த்த
நீள்வட்டச் சருகையும்
நண்பன் பரிசளித்த
வெண்பட்டு இறகையும்
உள்ளே அனுப்பும்படி
ஓயாமல் இரைந்திருந்தாள்
புற்றினுள் அடைந்திருந்த சிறுமி.
இறுதிவரை அனுமதிக்கவில்லை
கிருமிகள் வெறுப்பதாய்க் காரணங் கூறிப்பின்
தனிமையில் உடைந்தழுத காவலன்.

பின்பொருநாள்
கொடுங்காற்றில் அதிர்ந்தவொரு
கிளை பிரிந்த சருகையும்
சிலிர்த்தலறிய பறவையொன்றின்
செம்மஞ்சள் இறகையும்
மௌனமாய்ப் பிணைத்தது
முற்றிலும் கருக்காத
முகிலின் வீழ் துளி.
எவரையும் கேளாமல்
ஈரக்காற்றிறங்கி
இனியவை தழுவக்கூடும்
நீளத்தில் சிறியதந்த
அறுகோணப் பெட்டியை.