வெண்டைப் பொரியலில் சேர்த்த
துருவிய தேங்காய் ஏனோ
தும்பைகள் பூத்த புல்வெளியாய்த்
தோன்றிய நொடியில்தான்
வாணலியின் விளிம்புகள் தாண்டி
வந்து குதித்ததொரு கவிதை..
அடுக்களை வெறுத்து
அடைக்கலம் ஆனது
அழிப்பான் உற்பத்திக்கு
அன்புமகள் சேகரிக்கும்
கூம்புகளாய்ச் சுருண்டிருந்த
பென்சிலின் துருவலுக்குள்....
அலுவலகக் கவலைகளில்
அமிழ்ந்திருந்த இரவில் மீண்டும்
ஆள்காட்டி விரல் வந்து
அமர்ந்திருந்த கவிதை
"எப்போது என்னை
எழுதுவாய்" என்றதும்
ஐந்தறைப் பெட்டிக்குள் அதை
அலுப்புடன் அடைத்தேன்..
அடுத்த விடியலின்
அவசரப் பொரியலில்
அவரையுடன் தீய்ந்தன என்
கவிதைத் துருவல்கள்...
பிழை எனதுதான்..
பென்சில் பெட்டியில் அது
பிழைத்திருக்கக் கூடும்..
விழிநீரின் காரணம்
விளக்கிட விரும்பாமல்
வெங்காயம் நறுக்கத் தொடங்கினேன்.
அன்பின் கௌரி,
ReplyDeleteஎன்னை மிகவும் வியப்பிலாழ்த்தும் கவிதையாக உங்களுடையது உள்ளது. சமையற்கட்டுக்குள், இன்னும் மூழ்கிய பணிக்குள் பெண்களின் கனவுகள் பல இது போல புதையுண்டுபோயுள்ளன.
அழகான வரிகளைக் கோர்த்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள் !
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !
//விழிநீரின் காரணம்
ReplyDeleteவிளக்கிட விரும்பாமல்
வெங்காயம் நறுக்கத் தொடங்கினேன். //
அடிக்கடி இப்படி ஆவதுண்டே!!!!.அழகான உணர்வுகள்.....
பெண்களுக்கே உரித்தான சமையல் கட்டிலும் இதனை அழகான கவிதையின் பிறப்பா அருமை மிகவும் அருமை .........
ReplyDeleteரிஷான், அருணா, ராகா..
ReplyDeleteஉங்களின் முதல் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சி அளிக்கின்றன..
நன்றிகள் பல
//பிழை எனதுதான்..
ReplyDeleteபென்சில் பெட்டியில் அது
பிழைத்திருக்கக் கூடும்..
விழிநீரின் காரணம்
விளக்கிட விரும்பாமல்
வெங்காயம் நறுக்கத் தொடங்கினேன்.//
ம்...என்ன சொல்வதென்று தெரியவில்லை
அவ்வளவு அருமை...
புதியவன், மிக்க நன்றி
ReplyDeleteஅப்பாடா...ஒரு வழியா உங்களோட எல்லா கவிதைகளையும் படிச்சு முடிச்சுட்டேன்.. :-)
ReplyDeleteஎன் Browser Favourites List-ல உங்க Blog Add பண்ணிட்டேன்...இனிமே அடிக்கடி உங்க updateகாக check பண்ணுவேனே...:-)