10 June, 2009

இடிபாடுகளில்..


*
தலைமுறைகள் கண்ட
தெருமுனை வீட்டை
இடிக்கத் தொடங்கியிருந்தார்கள்..

***
நெடுநாட்களாய் மண் கொணர்ந்து
சன்னலின் மூலையில்
கூடு செய்த குளவிக்கு
எவரும் அறிவிக்கவில்லை
அதன்வீடும் தகர்க்கப்படுவதை..
வழிதவறியதாய் வருந்தி
அடுத்தடுத்த வீடுகளில்
அலைந்தபடி இருக்கிறது
குளவி.

***
கோடையில் ஒருநாள் தனக்குக்
குடைபிடித்த குழந்தையுடன்
இன்னொரு சிநேகப் பொழுதை
எதிர்நோக்கி இருக்கிறது
வாசலருகில் வேப்பங்கன்று..

***
தலைமுறைகள் மாறுகையில்
தனை இரசிக்க எவருமற்று
தனித்திருக்கும் மொட்டைமாடியிடம்
இறுதிவரை சொல்லவில்லை
நிலவு தன் நிலையை..

***
நிறைய மகிழ்ச்சியுடன்
நிறங்கள் தெரிவு செய்து
சுவரில் தான் வரைந்த
வண்ணத்துப் பூச்சிக்கு
சிறகொடிகையில்
வலித்திருக்குமென
புலம்பித் திரிகிறாள்
சிறுமியொருத்தி..

***
எதிர்வீட்டுக் கொடியில்
சிறுமியின் பாவாடையில்
சிவப்பாய்க் காய்கின்றன
இழைத்து நெய்யப்பட்ட
பட்டுப்புழுக் கூடுகள்.
*








9 comments:

  1. அருமை.. என் வலி யாருக்கு தெரியும்.

    ReplyDelete
  2. வீடென்று எதைச் சொல்கிறோம். நம்மோடு கூடவே இருந்து நம் உள்ளுணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, நம் துக்கம், விரக்தி, தனிமை, காதல், அன்பு, நேசம் அனைத்து உணர்வுகளையும் தரிசித்து ஒரு மௌனசாட்சியாக இருக்கிறது வீடு. ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் வாழ்ந்து புழங்கிய ஒரு வீடு பற்றிய நினைவு நிச்சயம் பாசி போல பசுமையாய்ப் பற்றிப் படர்ந்திருக்கும். ஞாபகத்தின் நுண் வேர்கள் சிலிர்த்தது இக்கவிதையை வாசிக்கும் கணத்தில்.
    பகிர்விற்கு நன்றி.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  3. அருமை !

    "விற்கப்பட்ட வாழ்ந்து கெட்டவனின் வீட்டில்
    பெயர்க்கப்படும் கதவுகளுக்காய்
    குரைத்துக் களைக்கிற பெட்டை நாயை அடக்க முயல்கிறவனின்
    வலி
    புகைப்படம் மட்டும் வைத்து அழ நேர்கிற சாவுதனை ஒக்கும்"

    என்ற எனது பழைய வரிகளை நினைவூட்டுகிறது இவ்வரிகள்....
    உங்கள் மொழி மேருகேறிக் கொண்டே போகிறது தோழி

    ReplyDelete
  4. நல்லக் கவிதைகள்.

    ரொம்ப பிடித்தது.

    //நெடுநாட்களாய் மண் கொணர்ந்து
    சன்னலின் மூலையில்
    கூடு செய்த குளவிக்கு
    எவரும் அறிவிக்கவில்லை
    அதன்வீடும் தகர்க்கப்படுவதை..
    வழிதவறியதாய் வருந்தி
    அடுத்தடுத்த வீடுகளில்
    அலைந்தபடி இருக்கிறது
    குளவி.//

    //நிறைய மகிழ்ச்சியுடன்
    நிறங்கள் தெரிவு செய்து
    சுவரில் தான் வரைந்த
    வண்ணத்துப் பூச்சிக்கு
    சிறகொடிகையில்
    வலித்திருக்குமென
    புலம்பித் திரிகிறாள்
    சிறுமியொருத்தி..//

    ReplyDelete
  5. புதுமை...மாற்றங்கள் நாம் வாழ்ந்து அனுபவித்த நிலாக்கால நினைவுகளை நொடிப்பொழுதில் அழித்தாலும் நெஞ்சின் எங்கோ ஒரு மூலையில் அதன் ஈரச்சுவடுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டுதான் வாழ்கிறோம் ப்ரியா..கவிதை அருமை :-)

    ReplyDelete
  6. இடுபடும் வீட்டோடு அங்கே வாழ்ந்த‌ ச‌ந்தோச‌ த‌ருண‌ங்க‌ள் ச‌ண்டைக‌ள் துக்க‌ங்க‌ள் இன்னும் ப‌ல‌ உண‌ர்வுக‌ளும்.... வீடு என்ப‌து வெறும் க‌ற்க‌ளும் ம‌ண்ணுமில்லை. அழ‌கா சொல்லி இருக்கீங்க‌ கௌரி வாழ்த்துக‌ள்

    //தலைமுறைகள் மாறுகையில்
    தனை இரசிக்க எவருமற்று
    தனித்திருக்கும் மொட்டைமாடியிடம்
    இறுதிவரை சொல்லவில்லை
    நிலவு தன் நிலையை..//

    genearation gap என்ற‌ அர்த்த‌ம் கூட‌ வ‌ருது

    வாழ்த்துக‌ள் இன்னும் நிறைய‌ எழுதுங்க‌ள்

    ReplyDelete
  7. //தனித்திருக்கும் மொட்டைமாடியிடம்
    இறுதிவரை சொல்லவில்லை
    நிலவு தன் நிலையை..//

    அட.. இது புதுசு.. :-)))))))

    ReplyDelete
  8. தலைமுறைகள் மாறுகையில்
    தனை இரசிக்க எவருமற்று
    தனித்திருக்கும் மொட்டைமாடியிடம்
    இறுதிவரை சொல்லவில்லை
    நிலவு தன் நிலையை..

    Super..really most of us forget the moon is there in the sky... Hmm Pesama unga veetula nan poranthirukalam..neenga kavithai elithiya udane first person-a nan padikkalamla...:-)

    ReplyDelete
  9. தலைமுறைகள் மாறுகையில்
    தனை இரசிக்க எவருமற்று
    தனித்திருக்கும் மொட்டைமாடியிடம்
    இறுதிவரை சொல்லவில்லை
    நிலவு தன் நிலையை //
    மிக மிக பிடித்தது

    ReplyDelete