28 May, 2009

அழகு

உடையின் நிறத்தில்
உதட்டுச் சாயமும்
நகையும் செருப்பும்
நகப் பூச்சுமென
நிறங்கள் புசித்து
நீளுமிவ்வாழ்வின்
இன்னுமோர் பிறந்தநாளில்
எதை விடவும்
அழகாய் இருக்கிறது
இரட்டைவரிக் காகிதத்தில்
இதழுக்கொரு நிறந்தீட்டி
மழலையொன்று வரைந்து தரும்
மலரின் வாழ்த்து.

கவனம்


இருசக்கர வாகனத்தை
இயக்கும் தோரணையில்
கைவிரல்கள் மடக்கி
வாயில் ஒலியெழுப்பி
கரையிலோடும் சிறுவனின்
கவனமீர்க்க முடியாமல்
மழைக்காலத்து ஏரியை
மௌனமாய்க் கடக்கிறது
விமானமொன்றின் நிழல்..

27 May, 2009

ஒரு வானவில்லின் மரணம்



அதுவோர் கார்காலம்..
அம்மன் கோயிலில் திருவிழா..
பள்ளி மறந்த பட்டாம்பூச்சிகள்
பஞ்சுமிட்டாய்களை மொய்த்திருக்க..
ஒற்றைக் கழியில் கடைவிரித்த
உள்ளூர் அண்ணாச்சியின்
உயிர்வளியின் எச்சங்கொண்டு
உடல் பருத்தன பலூன்கள்..

மேற்குக் காதலனின் கதிர்கண்டு
மழைக் காதலி உதிர்த்த புன்னகைக்கு
கிழக்கில் சிறிதாய்க் கொண்டாட்டம்..
சன்னல்வழி வானவில் பருகினோம்
உறவுக்காரச் சிறுமியும் நானும்.
முகந்தெரியாத குழந்தையின் பட்டம்
முத்தமிட முனைந்தது வானவில்லை...

'நாளைய தேர் விழாவில்
எந்தச் சாதிக்கு முதல்மரியாதை'
கலவரம் கக்கிய கேள்வியென்
காதடையும் முன்னரே
கண்ணீர்ப்புகை சன்னல் மறைக்க ..
செவிக்குள் நுழைந்த சிற்றெறும்பாய்
சிறுமியின் புலம்பல் குடைந்தது
'வானவில் புகையில் மறஞ்சு போச்சுக்கா'..

வண்ணத்துப் பூச்சிகளின் நாவில்
வண்ணமெழுதா மிட்டாய்களுடன்
வயிறுடைந்த பலூன்களும்
வருந்திச் சுருங்கின..
வானவில் தொடாத வாலறுந்த பட்டம்
வீதியோரத்து வேம்பின் கிளையிடம்
வெறுமைக் கதை செப்புகையில்
முடிந்து போயிருந்தது கலவரம்...

மறுநாள்..
சாமிகுத்தம் தவிர்க்க
ஏதோவொரு சாதி
தேரிழுத்தது...
அம்மனுக்குப் படைத்த
சர்க்கரைப் பொங்கல்
இனித்ததா என்றெனக்கு
ஞாபகமில்லை.

26 May, 2009

காணாமல் போனவை -1


பால்யத்துடன் சேர்ந்து
காணாமல் போயிருந்தது
வயிற்றில் முளைத்து
வாய்வழி வருமென
அஞ்சப்பட்ட திராட்சை விதை..
வருடங்கள் கழிந்தபின்
எதிர்பாராத் தருணத்தில்
மனப் பொந்தினின்று
முளைத்தெழுகிறது
மெல்லிய கவிதையாய்.

23 May, 2009

காதலின் தூக்குமேடைகள்


இருசக்கர வாகனங்களின்
இருக்கையின் பின்கம்பிகளில்...
கூட்டமற்ற திரையரங்குகளின்
கூரை மின்விசிறிகளில்...
கடற்கரையில் வானளக்கும்
பட்டங்களின் வால்களில்..
இரட்டைப் பொருள் பாடல்களின்
ஒற்றைச் சுழிக் கொம்புகளில்...
புதர்கள் மண்டிய பூங்காக்களில்
பதின்மவயதுப் பார்வைக் காந்தங்கள்
பாய்ச்சும் மின்னலை நெளிவுகளில்...
கூட்டுக் குடும்பங்களில்
கடிதம் விநியோகிக்கும்
ஆறரை வயதுத் தூதுவனின்
அரைஞான் கயிற்றிலென...
தத்தம் தலைவிதிக்கேற்ப
தூக்கில் தொங்குகின்றன
பொதுவிடங்களில் காட்சிப் பொருளாகும்
புனிதக் காதல்கள்.

வெற்றிட நிரப்பிகள்

ஊதா நிறப் பூக்களை

உதிர்த்திருந்த மரத்தை

பெருமழையொன்று

பெயர்த்தெறிந்த நாளில்

பிரிவறிவித்தாய் நீ...


மரம், மழை

நான், நீயென

காட்சிகள் குழம்பிய

அன்றிரவின் கனவில்..

விடுதலிலோ விடுபடுதலிலோ

விருப்பமற்றுக்

கவிதையின் மடியமர்ந்து

வெறுமையின் வெளிதனை

வெறித்திருந்தேன்..


விடியலில் ஓர்

பாடுபொருளுக்கான வெற்றிடம்

வெறுமை கொண்டே

நிரப்பப்படுகையில்..

எல்லோரும் அழைத்தாலும்

எனக்கு மனமில்லை

பெருமழையைப்

பேய்மழையென்றழைக்க.

http://youthful.vikatan.com/youth/gowripriyapoem25052009.asp

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1433

நன்றி: யூத்புல் விகடன், உயிர்மை






தேடல்

பாடுபொருளாகவே
பழகிச் சலித்த மழை
பருத்த பலாவேர்களினூடே
உதிர்த்துச் சென்றிருந்தது
உவமேயங்களை..

தேவதைக் கதைகளில்
விளையாடும் சிறுமிகளின்
வெண்பட்டாடை..
வெடித்துக் காற்றேகும் பருத்தி..
வெண் மயிற்பீலி சாமரம்..
தொடுதலில் சிலிர்த்து
விசிறியாய் விரியும்
சிசுவொன்றின் மென்பாதமென..
காளான்களுக்குவமை தேடி
கவிதைப் பெருவெளியில்
கரைந்து தொலைந்தேன் நான்..