29 October, 2021

ஆவணங்கள் முக்கியம் அமைச்சரே

 கடற்காற்று சிகை கலைக்க

வாழ்வதை இன்று ரசித்தேன்.
எத்தனை முறை 
இதயம் துடித்ததென
எழுதி வைத்தாயா?

இளஞ்சிவப்பிலும்
கருநீலத்திலும்
மலர்கள் செழிக்கும்
தோட்டம் உண்டு என்னிடம்.
கிளை நுனிகளைக்
காலக் கெடுவுக்குள்
கத்தரித்தாயா,
ஆவணம் எங்கே?

ஒரு வானவில்லின்
வர்ணப்பிரிகையைக்
கண்டு மெய் மறந்தேன்..
காண்புறு ஒளியின்
அலைநீளம் அறிவாயா?

சாகக் கிடந்தவனை
மடியில் கிடத்தி
சில மிடறுகள் புகட்டினேன்.
அவன் மாண்டு போகும்
முன்னரும் பின்னரும்
உனது குவளையின் 
நீர் இருப்பை
அளந்து விட்டாய் அல்லவா?

எனக்கு மூச்சு முட்டுகிறது.
அட்டவணையில் குறித்துவை,
ஆய்வுக்கு ஆகும்.

..........

 இன்று

நாளை
இவ்வாரம்
இத்திங்கள்....

செய்ய வேண்டியவற்றின்
அட்டவணையை
மடித்து மடித்து
அடைக்கிறேன்
இக்கணத்தின்
தொண்டைக் குழிக்குள்.

தற்சிதைவில் ஒரு
தாங்கவொண்ணாப்
பெருமையின்
தாண்டவம்.

கண்கள் கூசக் கூச
இதயம் விதிர்விதிர்க்க
விடாய்க்குருதி கதகதக்க
இருக்கிறேன் 
இருக்கிறேன்
என்கிறது உடல்.

.....

 எனது பார்வையில்

உமது முதிர்ச்சியை
ஏன் எதிர்பார்க்கிறீர்?

பழுத்த இலையொன்று
கிளை நீங்கிக் 
கீழிறங்கும் போது
கார்ட்டூன் படங்களின்
காற்றில் சுழலும்
இசைக் குறிப்பாய்
நான் அதைக் காண்பதில்
யாருக்கென்ன
நட்டம்?

காலையில் இங்கொரு புறா நின்றிருந்தது

 என்ன பிடித்துவிடக்கூடும்

இங்கு உனக்கு?
நின்‌ மூதாதையர் கண்டிருந்த 
மாடத்து சிறுமணிச் சுடரின்
குறுக்குவெட்டுத் தோற்றத்தை
விழிகளில் சுமந்தலையும் உனக்கு?

என்ன பிடித்துவிடக் கூடும்
இங்கு எனக்கு?
அதி ஆதி நினைவென
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்த குளக்கரையை
மனதினில் சுமந்தலையும் எனக்கு?

என்ன பிடித்துவிடக்கூடும்
இங்கு உனக்கும் எனக்கும்?
ஆறாம் தளத்து மொட்டைமாடியில்
காலை நடை பயிலுகையில்
வானுக்கருகில் இருக்கிறோம்
என்பதைத் தவிர!

இன்றோ
அலையல்ல மலையல்ல,
அடுக்ககத்து முதுகிலேறி
பெருநகரத்து 
வெண்சூரியன் வருகையில்..

உன் கழுத்தின் 
மினுமினுப்பை 
கைப்பேசியின்
சட்டத்தினுள்
அடைக்கவே எத்தனித்தேன்..

பச்சை ஒளிரும் பொன்வண்டை
தீப்பெட்டிக்குள் அடைத்த 
பால்ய நண்பனை
நினைந்தபடி..

போயும் போயும் 
எனை அஞ்சியா
பறந்து மறைந்தாய்??

....

 இரண்டு வயதில்

கட்டிலின் அடியில்

ஒளிந்து கொண்டவள்
"அம்மா நான் இங்க இல்லை" என்றாள்.

நான்கரை வயதில்
"நான் கதவுக்குப் பின்னால்
ஒளிஞ்சுக்கறேன்.
நான் இப்போ சொன்னதை மறந்துட்டுத் தேடுங்க" என்றாள்.

ஆறரையில் தோழிகளுடன்
விளையாட்டுக் கூடாரத்துள்
சப்தமின்றி
ஒளியக் கற்றாள்.

ஒருபோதும் அவளைக்
கண்டுபிடித்ததில்லை.

நானறிவேன்,
ஒளிய நினைக்கையில்
ஒளிதலுக்கும்
தொலைய முற்படுகையில்
தொலைதலுக்கும்
பெரியவர்களின் உலகில்
இடமில்லை.

இருக்கவே இருக்கிறது
முகநூல் கணக்கை
முடக்கிக் கொள்வதும்,
விமானப் பயன்பாட்டு முறைக்கு
அலைபேசியை மாற்றுவதும்.

சுடரும் நெகிழித் தாமரைகள்


 

1

'திடும்'மென விரிந்து
இதழுக்கொரு சுடர் தாங்கி
சுழன்று எரியும்
நெகிழித் தாமரை.
ஃபூ ஃபூ ஃபூ என
ஆர்ப்பரித்து ஊதுவாள்
அக்கா.
ப்பூ.. ப்பூ... ப்பூஊஊ என
உதடு குவித்து
மெதுவாய் ஊதும்
அருகில் நின்று
அதிர்ந்து போன
குழந்தை.
குரல் தேய்ந்து
குப்பை சேரும்வரை
இசைத்துக் கொண்டிருக்கும்
தாமரை.

************
2

இந்த
நெகிழித் தாமரையைத்
தேர்ந்த நொடியில் நீங்கள்
பிறந்தநாள் கேக்கின்
நிறம் குறித்து
யோசித்திருக்கலாம்.

ஒரு நீலச் சதுரத்தை
வான் படர்ந்த குளமெனவோ
ஒரு பச்சை வட்டத்தை
ஒட்டாத இலையெனவோ
கண்டிருத்தல் எளிது.

செயற்கைப் பூச்சுகள் தாம்
எந்நிறத்திலும் உண்டே!!
பிறகு ஏனிந்த
அடர்பழுப்பில் இதய வடிவம்?

தாமரையின் கீழ் அது
என்னவோ போலிருக்கிறது.
ஒரு வறண்ட குளம் போல!!

****************
3

தீக்குச்சியை உரசி
சின்னஞ்சிறு முதல் சுடரை
உச்சியில் பொருத்தும் காலம்.

சொல்லாமல் கொள்ளாமல்
மலரும் தாமரை
இளஞ்சிவப்பு இதழ்களில்
சுடரெரியச்
சுழன்றிசைக்கும்.

அற்புதம்
என்பர் சிலர்.
அதீதம் 
என்பர் சிலர்.

சுழலாது இசைத்தாலோ
இசைக்காது சுழன்றாலோ
சுண்டிச் சுண்டியே
இயக்குவர் சிலர்.

பிறந்தநாள் குழந்தையின்
நெற்றியில் முளைத்த
முதல் பருவை
வெறிக்கிறாள் அம்மா,
அது அந்த
முதல் சுடராய் மினுங்க.

மிதவை

 



கண்ணாடியில் ஒட்டிய
பொட்டின் பின்னொரு
வட்டம்.

நிச்சலனக் குளத்தில்
படகின் கீழ் ஒரு
தலைகீழ்ப் படகு.

அகல் விளக்கின்
சுடர் அடியில்
எண்ணெய்க் குழியிலொரு
கிடைமட்டச் சுடர்.

நள்ளிரவில் வெளியேறும்
கவிதை‌
உள்ளேயும் மிதந்திருக்கும்
உறங்கும் வரை.

உள்ளத்தனைய...

 


சாதனைப் பட்டியலில் 

எண்ணிக்கை கூடும்.


பதாகைகள் நூறு 

பட்டொளி வீசும்.


கண்கள் ஓயும் 

கனவொன்று தேயும் 

கவிதைகள் மாயும்.


நிறக்குருடரின் முன் 

செவ்வல்லிக் குளமென 

விரிந்தே கிடைக்கும் 

வாழ்வும்.