07 May, 2015

இனியவை எண்ணில













முகில்சூழ் முகடுகளுடன்
மொழியின்றி கதைக்கும்
பள்ளத்தாக்கொன்றின்
செல்லச் சிறுநதியை
அறைக்கு இடம்பெயர்க்கிறாள்,
மௌனம் படர் இரவினூடே
தூளியினிரு சரிவுகளிடை
துயிலுமுன் சலசலக்கும்
இனியா
................................

கடைவாயில் பாலொழழுக
முக்கித் திணறி
முதுகு திருப்பி
புரள முயலும் இனியா,

நிலவு கசியும் முகத்துடன்
நில்லாது அலையும்
பௌர்ணமி இரவின்
குட்டிக்கடல்

...................................

உலோகக் குழல்களுடன்
உத்திரத்தில் தொங்கும்
சீனத்து மணியைச்
சீண்டி அசைக்கிறது காற்று..

துளையற்ற குழல்கள் ஐந்தை
மணியை நோக்கி நீட்டி வீசி
காற்றை அசைக்கிறாள் இனியா

.................


நேரம் போவதறியாமல்
நீந்தும் பாவனையில்
கைகால்கள் சுழற்றியபடி
கதைத்துக் கிடக்கிறாள் இனியா..

முகத்தினருகில் எதையும்
கொண்டு செல்லும் நொடியில்
உதடு குவித்து ஆகிறாள்
நா முளைத்த மீன்குஞ்சென.

..............

கோட்டைச் சுவர் மேல் போர்க்கொம்புகளென
மேல் நோக்கி வளையுமவள்
இமை மயிர்கள்...
செல்லச்சேனையென
நொடிக்கொன்றாய் அணிவகுத்து
விழியினின்று வெளியேறும்
பாவனைகள்.

2 comments: