01 April, 2009

வெங்காயம் சமையலுக்கில்லை

வெண்டைப் பொரியலில் சேர்த்த
துருவிய தேங்காய் ஏனோ
தும்பைகள் பூத்த புல்வெளியாய்த்
தோன்றிய நொடியில்தான்
வாணலியின் விளிம்புகள் தாண்டி
வந்து குதித்ததொரு கவிதை..

அடுக்களை வெறுத்து
அடைக்கலம் ஆனது
அழிப்பான் உற்பத்திக்கு
அன்புமகள் சேகரிக்கும்
கூம்புகளாய்ச் சுருண்டிருந்த
பென்சிலின் துருவலுக்குள்....

அலுவலகக் கவலைகளில்
அமிழ்ந்திருந்த இரவில் மீண்டும்
ஆள்காட்டி விரல் வந்து
அமர்ந்திருந்த கவிதை
"எப்போது என்னை
எழுதுவாய்" என்றதும்
ஐந்தறைப் பெட்டிக்குள் அதை
அலுப்புடன் அடைத்தேன்..

அடுத்த விடியலின்
அவசரப் பொரியலில்
அவரையுடன் தீய்ந்தன என்
கவிதைத் துருவல்கள்...

பிழை எனதுதான்..
பென்சில் பெட்டியில் அது
பிழைத்திருக்கக் கூடும்..
விழிநீரின் காரணம்
விளக்கிட விரும்பாமல்
வெங்காயம் நறுக்கத் தொடங்கினேன்
.