22 January, 2011

உடையும் பறவைகள்

நுரையீரல்களில் நூறாயிரமும்
முகத்தில் ஒன்றுமெனப்
பூக்கள் குவித்தவற்றை
விடுவிக்கிறாள் சிறுமி...
குப்பிச் சிறை விடுத்துக்
குறுவளையம் கடந்து
காற்றேகி உடைகின்றன
உருண்ட பறவைகள்.

அறையோரக் குவளையுள்
ஓயாமல் மௌனம் உமிழும்
ஒற்றைமீனின் இதழ் நீங்கி
நிச்சலன நீர்ப்பரப்பை
மிக மெலிதாய் அசைத்துடைகின்றன
சற்றே சிறிய உருண்ட பறவைகள்.

மீனிருக்கும் அறை நுழைந்து
பாழ்மௌனப் பட்சிகள்
உடைந்துலவும் காற்றில்
பேருவகைப் பறவைகளைப்
பறக்கப் பணிக்கிறாள் சிறுமி.

அவளுடன் அறை எய்தும் கவிதையொன்றில்
மீன்கள் நடக்கவும்
சிறுமிகள் பறக்கவும்
பறவைகள் நீந்தவும்
தொடங்குகின்றன.