06 September, 2011

யாவுமாய்


நிறமிகள் கலந்திடாத பொழுதுகளில்
எதிர்ப்படும் யாவுமாய்
இருக்கிறது நீர்..

படர்ந்து நீங்கும்
பகல்களுக்கிடையில்
எப்போதும் எங்கேனும்
இருக்கிறது இரவு
இருண்டு விரியும்
அண்டத்தின் துண்டமென..

எவருமிலாததாய்
அறியப்படும் பொழுதுகளில்
நிறைய இருக்கிறேன் நான்..
யாவுமாய் இருக்கிறதோர் கவிதை

நன்றி உயிரோசை

15 April, 2011

மரணத்தைக் கூறிடுகையில்..


மரணித்த வண்ணத்துப்பூச்சியை

இழுத்தூரும் எறும்புகள் கண்டு

இறுகக் கண்கள் அடைக்கிறேன்..


கனமழை ஓயும் விடியல்களில்

நாசி மூடி நடக்கிறேன்..

வீழ்ந்த மரத்தின் வேர்சுரக்கும்

மண் மற்றும் மரணவாசம் தவிர்க்க..


கருஞ்சிறகெரிய ஒன்று கதறி வீழ்வதும்

கண்டிருந்தவை கரைந்தலைவதும்

கேட்கச் சகிப்பதில்லை..

காக்கைகள் சுற்றும் மின்கம்பங்களைக்

காது பொத்திக் கடக்கிறேன்...


எதன் மரணமும் என்னை

இளக்க முடியாதென

இத்தனை கவனமாய்ப் பாவித்துப் பழகியும்

இறந்து பிறந்த பூவொன்றின்

முதிராத முகவாய் தடவித் தொடங்கி

மெல்லக் கீழ்நோக்கிக் கீறுகையில்

மதகுகள் உடைக்கும் மனம்

மருகியபடி உதிர்க்கிறது

மரணங்குறித்த கவிதையொன்றை...

இன்மையை ஈன்றவளின்

இறுகிக் கசியும் கருப்பையென

20 March, 2011

...


நிறமிகள் மரித்த
இரவின் வெளியை
நிரப்பத் துவங்குகிறது
நிறமற்ற பெருமழை.
இந்நொடிவரை
ஒளியுமிழ்ந்த தெருவிளக்கு
உதிர்க்கத் துவங்குகிறது
பொன்சிறகு தரித்த
மின்மினிகளை.

27 February, 2011

மன்னிப்பு


பருத்தியல்லாத ஒன்றைப்
பருத்தியெனச் சொல்லிவிட்ட
நடைபாதை வணிகனை
ஏசாமல்தான் விடுங்களேன்..

எதிர்ப்புகளேதும் தெரிவிக்காத
எளியவன் அவன்..

சற்றேனும் மென்மையற்ற
உயிர்த்தலும் உதிர்தலுமற்ற
இலையல்லாத இலைகளை
எந்நேரமும் முட்டியலையும்
உங்கள் செல்ல மீன்குஞ்சினைப் போலவே
மிக எளியவனவன்.

15 February, 2011

இன்மையின் திரிபுகள்















பலநூறு சர்ப்பங்கள்
பாலை கடந்ததுவாய்
விழித்திரையில் படரும்
உருவிலிக் காற்றின் பிம்பம்..

யுகங்களாய் மௌனத்துழலும்
நிலவை மொழிபெயர்த்து
கொதிக்கும் வெள்ளியெனக்
குமுறித் தீர்க்கும்
பௌர்ணமிக் கடல்..

நிழலென வீழ்ந்து
நீரின் விரல்பிடித்து
நெடுந்தூரம் சுழன்றோடும்
அசைதல் அறியாத
ஆற்றங்கரை மரத்தண்டு..

பிறப்பின் முதற்கேவலாய்ப்
பெருங்குரலில் குழையும்
நீர் மண்டிய கருப்பைக்குள்
நெகிழ்ந்திசைத்தல் கூடாத
சிசுவின் நுரையீரல்..

பொழியாதும் கலையாதும்
புரண்டலைந்து திரியும்
புயற்காலத்து முகிலுடைகையில்
விழியுடைத்து வழியும்
வெளிப்படுதல் வாய்க்காத
பெருநேசம்..

உருவமும் மொழியும்
அசைவும் குரலும்
வெளிப்படுதலும் வேறெதுவும்
இல்லாத கொடும் வெறுமை
அணுவணுவாய் யாதுமாகும்
கவியொன்றில்.

06 February, 2011

பேரொளிப் பெண்டுலம்

*
சன்னலின் மேல்விளிம்பில்
விழி பொருத்தி
கீழும் மேலும்
மேலும் கீழுமாய்த்
தலையசைக்கிறேன்..
வீட்டிற்குள் வந்து வந்து போகிறது
சற்றுமுன் உதித்திருக்கும் நிலா.

**
மீண்டும் மீண்டும்
ஒருவிழி மூடி மற்றதைத் திறந்தும்
முன்னதைத் திறக்கையில்
மற்றதை அடைத்தும்
வான்பார்த்துக் கிடக்கிறேன்..
ஒன்றுமிலாப் பெருவெளியின்
உருவிலிக் கயிறு பிடித்து
பேரொளிப் பெண்டுலமாய்
எனக்கென ஆடுகிறது
நிலா.
*

22 January, 2011

உடையும் பறவைகள்

நுரையீரல்களில் நூறாயிரமும்
முகத்தில் ஒன்றுமெனப்
பூக்கள் குவித்தவற்றை
விடுவிக்கிறாள் சிறுமி...
குப்பிச் சிறை விடுத்துக்
குறுவளையம் கடந்து
காற்றேகி உடைகின்றன
உருண்ட பறவைகள்.

அறையோரக் குவளையுள்
ஓயாமல் மௌனம் உமிழும்
ஒற்றைமீனின் இதழ் நீங்கி
நிச்சலன நீர்ப்பரப்பை
மிக மெலிதாய் அசைத்துடைகின்றன
சற்றே சிறிய உருண்ட பறவைகள்.

மீனிருக்கும் அறை நுழைந்து
பாழ்மௌனப் பட்சிகள்
உடைந்துலவும் காற்றில்
பேருவகைப் பறவைகளைப்
பறக்கப் பணிக்கிறாள் சிறுமி.

அவளுடன் அறை எய்தும் கவிதையொன்றில்
மீன்கள் நடக்கவும்
சிறுமிகள் பறக்கவும்
பறவைகள் நீந்தவும்
தொடங்குகின்றன.

பொதுமைய வட்டங்கள்

மெதுமெதுவாய்
மிக உன்னிப்பாய்
ஒன்றினுள் மற்றொன்றாய்
உடைந்த வட்டங்களுக்குள்
சின்னஞ்சிறு பந்துகளைச்
செலுத்தி விளையாடும்
அற்புதத் தருணங்களில்
எவர் அழைத்தாலும்
எளிதில் கலைவதில்லை அவள்.....

திடுமெனத் தெருநோக்கி
விரைபவளைத் தொடர்கிறேன்..
சில ஆயிரம் பந்துகளைத்
தேங்கிய நீரிலெறிந்து
அதிவிரைவாய்
மிக எளிதாய்
ஒன்றைச் சுற்றி மற்றொன்றாய்
சில லட்சம் வட்டங்கள் வரைந்து
இம்முறை அவளை
அழைத்திருப்பது மழை.

21 January, 2011

ரயில் குறிப்புகள்

தூரத்து மலையில்
காற்றுடன் நெளிகிறது
செந்நிற ரயிலென
காட்டுத்தீ..
மருண்டு வெளியேறும்
மலைமுகட்டுப் பறவையின் விழியில்
வளி கிழித்து விரையக்கூடும்
நீலத்தீயென ரயில்.

***
ஆதிச் சிவப்பு குன்ற
மெதுமெதுவாய் வெண்மை கூட
ஊர்ந்து வளர்கிறது
ரயிலின் வெளியில் பகல்
எதிரிருக்கைச் சிறுமியின்
மருதோன்றி நகம் போல.

***
தயக்கம் ததும்பும் நடை
கழுத்து மினுங்கத் தலையசைப்பு
மிரண்டுருளும் விழிப்பந்து
மென்செருமல் இல்லையெனில் மௌனம் மட்டும்
பேரொலிக்குப் படபடப்பு....
பெருநகரத்து இளைஞனின்
கிராமத்து மனைவியென
நடைமேடையில் திரிகிறது
ரயில் நிலையத்துப் புறாவொன்று.

***
கடைசிப் பெட்டியில்
ரயில் விரையும் திசைநோக்கி இருத்தல்
ரம்மியம்..
வழியின் வரைபடமென
வளைந்துருளும்
முந்தைய பெட்டிகள்..
தடம் மாற்றம் முன்னொலிபரப்பும்
தாளம் பிறழா சக்கரங்கள்..
இருள் மண்டிய குகையெதிலும்
முதல் ஆளாய் நுழைய
ஒருபோதும் நேர்வதில்லை..
பாதை குறித்த,
பாதையறிதல் விளைவித்த,
இறுதியில் இருத்தல் அல்லது
இறுதியாய் இருத்தல் பற்றிய
இம்சிக்கும் பயங்களில்லை.
வாழ்க்கை ரயில் போலில்லை.

***
பயணங்கள் யாவிலும்
சன்னல்கள் கடந்து
பறவைகளாகின்றன விழிகள்..
இமைச் சிறகசைத்தபடி
மலை, மரம், மழை,
வான், முகில், மதி,
கடல், வயல், வனம்,
செந்தீ பிரவகிக்கும்
விடியலின் நதியென
யாவற்றினூடும் விரைகின்றன
ஒவ்வொரு ரயிலுடனும்
சிலநூறு இணைப்பறவைகள்.