மின்தடைக்கு வேர்த்திருக்கிறது
மெழுகுவர்த்தி..
வாசலை அண்டி நிற்கும்
வன்மழை நனைத்த நாய்க்குட்டியைத்
துரத்தும் மனமில்லை எவர்க்கும்..
சற்றைக்கெல்லாம் தயக்கம் துறந்து
உட்சுவரெங்கும்
உலவத் தொடங்குகிறது
வால் குழைத்தபடி
மழையின் நிழல்.
***
ஊதியணைக்கப்படும்
சுடரின் நடனத்தில்
ஒரு கணம் உயிர்த்தசைந்து
உடன் மரிக்கிறது
உலோகப் பறவைச்சிலையொன்று.
***
வரைபடத்து நதிகளென
வளைந்தும் கிளைத்துமிருக்கிறது
இலையுதிர்ந்த மரமொன்றின்
இருளோவியம்..
வெயிலின் கரங்கள்
வெகு நேர்த்தியாய் வரைந்திருக்கும்
பாதி மட்டும் மட்டும் கட்டப்பட்ட
பறவையொன்றின் கூட்டில்
மரத்தடியில் நிற்கின்றன
வர்ணம் பூசப்பட்ட கோழிக்குஞ்சுகள்.
***
உயிர்ச்சத்து வேண்டி
கிடத்தப் பட்டிருக்கிறது குழந்தை
மரச்சட்டங்களின் எல்லை நுழையும்
மஞ்சள் வெயிலின் மடியில்...
சுவர் பற்றி மேலேறி
சூரியக்கற்றைகளை வழிமறித்து
சிசுவின் கன்னத்தில் படர்கிறது
சன்னலோரத்துச் சிறுகொடி.
***
இருசக்கர வாகனத்தை
இயக்கும் தோரணையில்
கைவிரல்கள் மடக்கி
வாயில் ஒலியெழுப்பி
கரையிலோடும் சிறுவனின்
கவனமீர்க்க முடியாமல்
மழைக்காலத்து ஏரியை
மௌனமாய்க் கடக்கிறது
விமானமொன்றின் நிழல்.
*
நன்றி : அகநாழிகை