24 December, 2010

நிறங்களாலானது


நிலவொளியின் வெண் மடியில்
நீண்டதொரு கவிப்பொழுதில்
நேசத்தின் நிறம் நீலமென்றாய்..
நிர்மல வான் ஆனாய்...

பிரிவுரைக்கும் தருணத்தில்
பிணங்கிய கருமுகிலென
பெருவானைப் போர்த்துகிறாய்
பித்தாக்கும் மௌனங் கொண்டு..

இரக்கமின்றி பொழிந்தும் தீர்க்கிறாய்
நிறங்களற்ற கொடுந்தனிமையை..

செயலற்று வான் வெறிக்கிறேன்
சினந்தொழுகிய கடுமழையில்
சிறகு கனத்து நிற்கும்
செவ்விழிப் பறவையென.

21 December, 2010

அனுமதி

புத்தகப்பை முழுதும்
நண்டுகள் ஊர்வதான
கொடுங்கனவில் வியர்த்தெழுந்த வேளை..
நேசித்த மரமுதிர்த்த
நீள்வட்டச் சருகையும்
நண்பன் பரிசளித்த
வெண்பட்டு இறகையும்
உள்ளே அனுப்பும்படி
ஓயாமல் இரைந்திருந்தாள்
புற்றினுள் அடைந்திருந்த சிறுமி.
இறுதிவரை அனுமதிக்கவில்லை
கிருமிகள் வெறுப்பதாய்க் காரணங் கூறிப்பின்
தனிமையில் உடைந்தழுத காவலன்.

பின்பொருநாள்
கொடுங்காற்றில் அதிர்ந்தவொரு
கிளை பிரிந்த சருகையும்
சிலிர்த்தலறிய பறவையொன்றின்
செம்மஞ்சள் இறகையும்
மௌனமாய்ப் பிணைத்தது
முற்றிலும் கருக்காத
முகிலின் வீழ் துளி.
எவரையும் கேளாமல்
ஈரக்காற்றிறங்கி
இனியவை தழுவக்கூடும்
நீளத்தில் சிறியதந்த
அறுகோணப் பெட்டியை.19 October, 2010

இறுதிச் சொல்

ஒன்றை மூன்றாக்கியது
உடம்பு சுடாத சிறுவெயில்.
கவிதையொன்று ஜனித்ததைக்
காகிதத்தில் குறித்தேன்..

இரண்டை வளைத்து
ஒன்றில் வசிக்க
இளமழை தொடங்கிய வேளையில்
ஈரமாய் முடியட்டுமென
இறுதிச்சொல் தேடினேன்..

வேறொன்றை ஏழாக்கி
வானில் கிடத்தின
வெயிலும் மழையும்.

12 June, 2010

காரணமின்றி..


அந்த
மிகுமழை இரவின்
மின்தடைப் பொழுதில்..
இருள் கண்டு மருண்டவளில்லை நான்..

கண்பார்த்துக் கதைத்திருக்க
கதைகளோ கதைப்போரோ
உடனிருக்கவில்லை.

குழந்தைமை தொலைத்தவர்க்கு
வீட்டுப்பாடம் செய்யவோ
விரல்களின் நிழல் கொண்டு
விளையாடி இருக்கவோ
விதிகளின்படி அனுமதியில்லை..

பாராமுகம் தாளாமல்
பகலிலேயே வெளியேறியிருந்தாள்
வழக்கமாயென் கவிதைகட்குப்
பாடுபொருள் தருவிக்கும் சிறுமி..

உறைந்திருந்த நினைவுகளைச்
சூடேற்றி விழுங்க
மௌனத்தின் வெம்மையே
போதுமாயிருந்தது..

எனினும் காரணமின்றி
எரிந்தபடி யிருந்தது
மெழுகுவர்த்தி..

நகர்த்துகையில் விரல் படிந்த
இரு துளி மெழுகை
இலகுவாய்ப் பிரித்தெடுத்தேன்
வெளிறிய பூவிதழென..

ஏனோ அது ஒத்திருந்தது
சுடர் தீண்டித் துடித்தடங்கிய
ஈசலின் மென்சிறகை.

காரணமின்றி நிகழ்ந்திருந்தது
அதன் மரணம்
உன் நிராகரிப்புகள் போலவே.
நன்றி அகநாழிகை

07 April, 2010

நிழல் பற்றியவை


மின்தடைக்கு வேர்த்திருக்கிறது
மெழுகுவர்த்தி..
வாசலை அண்டி நிற்கும்
வன்மழை நனைத்த நாய்க்குட்டியைத்
துரத்தும் மனமில்லை எவர்க்கும்..
சற்றைக்கெல்லாம் தயக்கம் துறந்து
உட்சுவரெங்கும்
உலவத் தொடங்குகிறது
வால் குழைத்தபடி
மழையின் நிழல்.

***

ஊதியணைக்கப்படும்
சுடரின் நடனத்தில்
ஒரு கணம் உயிர்த்தசைந்து
உடன் மரிக்கிறது
உலோகப் பறவைச்சிலையொன்று.

***

வரைபடத்து நதிகளென
வளைந்தும் கிளைத்துமிருக்கிறது
இலையுதிர்ந்த மரமொன்றின்
இருளோவியம்..
வெயிலின் கரங்கள்
வெகு நேர்த்தியாய் வரைந்திருக்கும்
பாதி மட்டும் மட்டும் கட்டப்பட்ட
பறவையொன்றின் கூட்டில்
மரத்தடியில் நிற்கின்றன
வர்ணம் பூசப்பட்ட கோழிக்குஞ்சுகள்.

***
உயிர்ச்சத்து வேண்டி
கிடத்தப் பட்டிருக்கிறது குழந்தை
மரச்சட்டங்களின் எல்லை நுழையும்
மஞ்சள் வெயிலின் மடியில்...
சுவர் பற்றி மேலேறி
சூரியக்கற்றைகளை வழிமறித்து
சிசுவின் கன்னத்தில் படர்கிறது
சன்னலோரத்துச் சிறுகொடி.

***

இருசக்கர வாகனத்தை
இயக்கும் தோரணையில்
கைவிரல்கள் மடக்கி
வாயில் ஒலியெழுப்பி
கரையிலோடும் சிறுவனின்
கவனமீர்க்க முடியாமல்
மழைக்காலத்து ஏரியை
மௌனமாய்க் கடக்கிறது
விமானமொன்றின் நிழல்.

*
நன்றி : அகநாழிகை

19 February, 2010

ஒருபோதும்..

ஒளியுமிடம் தேடி வரும்
விளையாட்டுச் சிறுமியின் விண்ணப்பத்தை
அவளினும் சன்னமாய் மீள்வாசிக்கிறது
காற்றிலாடும் சுடரின் மென்குரல்..

ஒருபோதும் இடமின்றி இருப்பதில்லை
கட்டிலினடியில், கைகளினிடையில்
மற்றும் சில கவிதைகளில்.


30 January, 2010

வீழ்ந்தெழுந்தது


வன்மழைக்குச் சாய்ந்திருந்தது
வழியோரத்து மரம்
இறுதிச் சருகையும் நீத்து..


காலுடைந்த காற்றாடியுடன்
கிளைநுனி பிணைத்தவன்
சில்லென்ற காற்றெங்கும்
சிந்தியபடி சென்றான்
சின்னஞ்சிறு புனைவுகளை...


அன்றைய கனவில்
பூத்துச் சுழன்றது மரம்
கரும்பச்சை, மஞ்சள் மற்றும்
வாடாமல்லி நிறங்களில்.

19 January, 2010

என்றேனும்..ஆயிரங்கோடி
அரூபச் சிறகு கொண்டு
திசைகள் யாவிலும்
திரிகிறது காற்று..

இங்கு
உலோக அதிர்வுணர்ந்து
குகைவாயிலில் குழுமியுள்ளனர்
குழந்தைகள் சிலர்..

அங்கு
மென்கூட்டின் அசைவுகளை
அவதானித்துக் கிடக்கிறான்
புகைப்படக் கலைஞனொருவன்..

எந்நொடியிலும் வெளிப்படலாம்
இருள் கிழித்து
இங்கொரு இரயிலும்..
இழைகள் உடைத்து
அங்கொரு வண்ணத்துப்பூச்சியும்..

முடிவற்ற பயணத்தின்
முதலசைவுக்கென
மௌனமாய்க் காத்திருக்கும்
காற்றினிரு சிறகுகள்
எந்நொடியிலும் எழும்பலாம்
இங்கிருந்தும் அங்கிருந்தும்..

என்றேனுமவை சந்திக்கக் கூடும்
வளிமண்டலத்தின் ஏதோவோர் அடுக்கில்..
வாய்ப்பிருந்தால் ஒரு கவிதையில்.

12 January, 2010

சிறகின் மேல் பறத்தல்


பரணில் கூடமைக்கும்
பறவையின் சிறகு தொற்றி
படுக்கையறை நுழையும்
பள்ளிக்கூட மதிலோரத்து
இலவின் நினைவு போல்..

கண்ணாடிச் சன்னல் வழி
கடினமின்றி நுழைகிறான்
வண்ணத்துப்பூச்சி துரத்துகையில்
நட்பாகி
வளர்ந்தபின் கடலாடி மரித்தவன்..

அளவிலிச் சிறகசைத்து
அலையும் வண்ணத்துப்பூச்சியென
விரிந்தபடி யிருக்கிறது
விமானத்தின் கீழ் கடல்.


உரையாடல் கவிதைப் போட்டிக்கு.

05 January, 2010

கிளை பற்றும் அணில் குஞ்சு


மார்கழி முன்னிரவில்
பனியொழுகும் தலைகளுடன்
படர்ந்திருக்கின்றனர் மக்கள்
கண்காட்சி யொன்றில்..
ஏந்தியவன் கழுத்தின்
இருமருங்கிலும் கால்களிட்டு
தோளமர்ந்திருக்கிறது குழந்தை.....
தந்தையின் கற்றைமுடியை
இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
காற்றிலாடும் செடியொன்றின்
கிளை பற்றிய அணில்குஞ்சென
மிருதுவாய் இருக்கக்கூடும்...

கவியொழுகும் தலையுடன்
கடந்து செல்கிறான்
கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்.