26 December, 2009

இரட்சிப்பு


விடுமுறை மதியமொன்று
விரிந்திருந்தது
தொலைக்காட்சியின் முன்..
அருகில் படம் வரையும் மகளுடன்
அவ்வப்போது கதைத்தபடி..

முனை மழுங்கிய
முக்கோணக் குன்றுகள்
இரண்டினுள் ஒன்றில்
இருந்தது நதிமூலம்...
நெளிந்திறங்கிய இணைகோடுகள்
நீள் நதியென அடிவாரத்தில்..
குழிந்த கோடொன்றைப்
படகெனச் செலுத்தினான்
வட்டத் தலையின் கீழ்
குச்சிக்கைகள் கொண்டவன்..
இலை போன்ற ஏதோவொன்று
முன்புறத்தில் கண் மற்றும்
முக்கோண வால் கொண்டு
மீனெனப் பட்டது..
வாலிணைந்த வளைகோடுகள்
வானளந்தன இரண்டிரண்டாய்
சென்டிமீட்டர் சுற்றளவுச் சூரியனருகில்..

தடாகமீன் கவ்விச் சென்றது
தாழப்பறந்த நாரையொன்று..
தொலைக்காட்சியினின்று விழி மீள்கையில்
மில்லிமீட்டர் சிறகுப் பறவைகள்
அவசரமாய் அழிக்கப்பட்டிருந்தன
அழிப்பான் அல்லது உமிழ்நீர் கொண்டு.

15 December, 2009

சிறுமிகள் விழுங்கும் சூரியன்கள்


வழியோரத்து நீர்நிலைகளில்
வண்ணங்குழைத்தபடியோ
தொலைவிருக்கும் பனைகளின்
தலை யுரசியபடியோ
நீலத்தினூடே செவ்விழைகளை
நெய்து திரிந்தபடியோ
தொடர்வண்டிப் பயணங்களில்
துவளாது உடன்வந்தும்..
நிலவுடன் ஒப்பிடுகையில்
கதிரவன் என் கவிதைகட்கு
அந்நியந்தான்..

பயணத்தில் ஜனிக்கும் இவ்விடியலில்
அருகருகிலிருக்கும் இரு முகில்களில்
ஒன்றைத் தனதென்றும்
மற்றொன்றை யெனதென்றும்
மழலைப் பிரகடனம் செய்கிறாள்
எதிர் இருக்கைச் சிறுமி..

ஒட்டியவை போலிருக்கும்
பிஸ்கட்டுகளைப் பிரித்து
இடையிருக்கும் செம்மஞ்சள்
வட்டத்தை விழுங்கிப் பின்
சிரித்தபடி செப்புகிறாள்
சூரியனை விழுங்கியதாய்..

எமதிரு முகில்களிடை
இயல்பாய் ஒட்டிக்கொண்ட
சூரியனைப் பிரித்தெடுத்து
விழுங்கத் தொடங்குகிறதொரு
கவிதை.

நன்றி- உயிரோசை

12 December, 2009

இடமாற்றம்


உணவு இடைவேளையில்
ஒன்றாய்ச் சாப்பிடுகையில்
மஞ்சளாடைச் சிறுமியின் கிண்ணத்து
மாதுளை முத்துக்களும்
சிவப்பு ஆடை அணிந்தவளின்
சோளக்கதிர் முத்துக்களும்
உருவம் ஒத்திருப்பதாய்த்
தமக்குள் பேசிக்கொண்டனர்..
அருகிலிருக்கும் அம்மாக்களின்
அனுமதி பெற்று
இடம் மாற்றிக் கொண்டனர்
கிண்ணங்களை.

எவரையும் கேட்காமல்
இடம் மாறிக் கொண்டன
அம்மாக்களின் புன்னகைகள்.

11 December, 2009

இறகு


முகில்கள் திரண்டிருந்ததோர்முற்பகலில்

பீலிகளற்ற பெண்மயிலொன்று

பூங்காவில் தனித்தலைகையில்

முதன்முதலாய்க் காணலுற்றோம்

நான் அவனையும்,
அவன் மயிலையும்..

விழிகள் சுருக்கி
இதழ்கள் பிதுக்கி
பாடநூல்கள் காட்டியது
இதுவல்ல என்பதாய்
ஓயாமல் புலம்பினான்..
ஏதோ நினைத்தவனாய்
புத்தகப்பையினின்று
இறகொன்றையெடுத்து
அதனருகில் இருத்திப்பின்
தந்தையின் விரல்பிடித்து நடந்தான்..

உருவமற்றதோர் இறகு
முளைக்கத் தொடங்கியது
என் எழுதுகோலின் முதுகில்.

13 July, 2009

.........

பேசத் துவங்காத குழந்தையொன்று
தொடர்ந்தோடுகிறது
பேசுதல் வாய்க்காத
வண்ணத்துப்பூச்சியை...
ஓயாமல் பேசிச் செல்கிறது
அழுந்துகையில் ஒலியெழுப்பும்
குழந்தையின் காலணி
.

12 June, 2009

காணாமல் போனவை-4

கரும்புள்ளிகள் பற்றிய
கவலை யேதுமற்று
அடர்மஞ்சள் சிறகசைத்து
அடிக்கடி வருவதுபோல்
அன்றும் வந்தது அது..

திறந்திருந்தது தமக்கையின்
தாவரவியலேடு
பசையுலர்த்தும் பொருட்டு..

பருத்த புத்தகங்களில்
பதப்படுத்தப்பட்டு
பதிவேட்டிற் கிடம்பெயர்ந்த
சங்குப்பூவிதழோரம்
அமர்ந்திருந்து
கிளம்ப எத்தனிக்கையில்
சில நொடிகள் படபடத்தது
இயல்புக்கு மாறாய்...

சிலநாட்களுக்குச்
சீனிக் கரைசல்..
தொடர்ந்த நாட்களில்
தேன் கிண்ணம் ..
சற்றே வளர்ந்ததும்
பூச்செடிகள் ...
எத்தனை செய்தும்
இன்றுவரை வரவில்லை மீண்டும்..

தேர்வுக்குப் பின்பான
ஆணிதுளைத்த பதிவேட்டில்
ஒட்டியிருக்கின்றன இன்னும்
கொஞ்சமாய் சிறகின் மஞ்சளும்..
ஒடிந்து போன அதன் காலும்..

காணாமல் போனவை- 3

பள்ளி விடுதிக்கு
அடிக்கடி வந்தன
ஒரே உறையிலிடப்பட்ட
சில கடிதங்கள்
எவரது எதுவென்றெல்லாம்
கேள்வி யெழுப்பாமல்..

தாத்தாவின் காகிதத்தில்
நாயின் கால்
வலப்புறம் தனித்தும்
புறாவினது இடப்புறம்
சுழன்று மிருக்கும்.

நுணுக்கி எழுதும்
அம்மாவின் கடிதம்
அவ்வப்போது ஏந்திவரும்
எண்ணெய் அல்லது
மஞ்சள் கறையை..

அப்பா எழுதுவது
அலுவலகத்து மையில்
அவசரமாய்...

ஓரங்களில் கோடிட்டு
ஒழுங்காய் எழுதுவது
தங்கை..

அனைவரின் தகவலையும்
தட்டச்சு செய்யும்
தங்கையின் இன்றைய மின்மடலைக்
கூர்ந்து நோக்குகையில்
தெரிகின்றன
கணினித்திரையின் நுண்சதுரங்கள் .

http://youthful.vikatan.com/youth/gowripriyapoem15062009.asp

காணாமல் போனவை -2


தேடும் அவகாசமற்று
அலுவலக அவசரங்களில்
தொலைத்திருந்த
உவமைகளுள் ஒன்றை,
சமையல்காரர் விடுப்பெடுத்த நாளில்
கண்டுகொண்டேன் மீண்டும்..
குட்டிப்பிறைகள்
குழம்பில் மிதந்தன
தோலுரிக்கப்பட்டு
.

11 June, 2009

வண்ணத்துப்பூச்சிக்காரர்களின் வண்ணத்துப்பூச்சிகள்

முந்தைய பதிவின் வண்ணத்துப்பூச்சிக்காரர்களின் வண்ணத்துப்பூச்சிகளை வலிக்காமல் எடுத்து வந்து இங்கு ஒட்டியிருக்கிறேன் (அதாங்க copy paste).

கார்த்தி
உன் நினைவூறிக் களைத்துக்
கிறுக்கிக் கிடந்த
தினமொன்றின் பின்னிரவில்...

என் சன்னல் கம்பியில்
ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்வதற்கும்
வெளியே
அடைமழை தொடங்குவதற்கும்
சரியாக இருந்தது...

நான் எழுதுவதை அத்தோடு
நிறுத்தினேன்...

தொடர்பவர்கள்
என்னைப் பட்டாம்பூச்சியென்றும்
உன்னை மழையெனவும்
உருவகித்துவிடக் கூடும்....

கார்த்திகா
பொக்கெட் ஷாப்பில்...
கண்ணாடிக் கதவில்
முட்டிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி.

லக்ஷ்மி ஸாஹம்பரி
பத்திரமாய் படிந்திருக்கிறது
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள்
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில்..
இதுவே போதுமானது
உயிரைப்பிழியும் என் தனிமையை
வரைதலில் எடுத்துரைக்க

இளங்கோ
சற்று முன்
ஒரு பட்டாம்பூச்சியை
வெளியேற்றி
பிய்ந்துத் தொங்கும்
பாதி லார்வாவின்
காம்புக்கு
பக்கத்தில்..
வெடிக்கக் கூடும்
ஒரு
ரோஜா மொக்கு..!

நேசமித்ரன்
வண்ணத்து பூச்சி பார்க்க
தோழியரோடு வந்திருக்கும்
இச்சிறுமிக்கு எப்படித் தருவது
ஏமாற்றத்தை ?

மருந்தடித்த காடு.....!

நளன்
ஏனோ இதுவரை எந்த பட்டாம்பூச்சியும்
வலிய வந்து என் தோள் அம‌ர்ந்ததில்லை
சிறுவய‌தில் துரத்திகொண்டு
ஓடிய‌போது என்மேல்
இவைகளுக்கு ஏற்பட்ட பயம்
இன்னும் இருக்கும்போல..
அதன் வ‌ண்ண‌ங்க‌ள் மேல் என‌க்கு
ஒருவித பொறாமை இருப்பினும்
அவ‌ற்றை புழுக்க‌ளோடு ஒப்பிட்டு பார்த்த‌தில்லை..
எப்பொழுதும் எதையோ தேடியவாறு
மிதந்து அலைகின்ற‌ன‌ ந‌ம் ம‌ன‌ம்போல‌வே..
சில நேரம் அசைபோடும் உன் நினைவுகள்
இவ‌ற்றின் ப‌ய‌ங்க‌ளை போக்குவ‌து குறித்த
க‌ருத்திய‌ல்களை த‌ற்காலிக‌மாக
ஒத்திவைத்துவிடுவ‌துண்டு
அன்று ப‌ச்சை கொட்டியிருக்கும் புல்வெளியில்
களைப்பாற வானம் பார்த்து ப‌டுத்திருந்தேன்
வந்து தோள‌மர்ந்த‌து
என‌க்கான‌ முத‌ல் பட்டாம்பூச்சி..
த‌னித்து கிட‌க்கும் ம‌ல‌ர்கள்
நான் போய் அம‌ர‌ தேனை ப‌ரிச‌ளிக்கும் என‌க்கு
நீ என‌க்காக‌ என்ன‌ வைத்துள்ளாய் என
சன்னமாய் யது கேட்ட‌போது
சொல்வத‌றியாம‌ல் சிறிதாக சிரித்தேன்
அது என் புன்ன‌கையை
க‌ட‌த்திகொண்டு ப‌றந்தோடிவிட்ட‌து


பட்டாம்பூச்சி


கவிதையல்லாத என் முதல் பதிவு இது.. "நீ" வலைப்பூவில் இருந்து இங்கு வந்திருக்கும் பட்டாம்பூச்சிக்கானது.. அனுப்பிய கார்த்தி அவர்களுக்கு நன்றி, என் profile படத்தை நிஜமாக்கியதற்கு..
அடுத்து, பட்டாம்பூச்சியை யாருக்கெல்லாம் அனுப்புவது?? மூன்றிற்கும் மேல் அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை என் குழப்பத்தைக் குறைப்பதால் எனக்கு அதைப் பிடித்திருக்கிறது.. வலப்புறம் உள்ள நனைவிப்போர் பட்டியலில் அனைவருக்கும் அனுப்ப ஆசை.. என்றாலும்,நிறைய பேர் ஏற்கனவே தம் வசம் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை வைத்திருப்பதால் இந்த ஆறு பேருக்கும்..

நேயமுகில் கார்த்திகா... என் மனதுக்குப் பிடித்த பாடுபொருட்கள் பலவற்றை இவரது மெல்லிய கவிதைகளில் கண்டுகொண்டேன்..
நிலாக்காலம் லக்ஷ்மி சாஹம்பரி... எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.. சமீபத்தில் இவர் எழுதவில்லை.. மீண்டும் வரக் காத்திருக்கிறேன்.
ஜீவநதி யின் ஜீவராஜ் தங்கராசா... கவிதைகள், சமூக நோக்குள்ள பதிவுகள், இலங்கையில் இவர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்புகள் , மருத்துவக் குறிப்புகள்,கவர்ந்த மனிதர்கள் என நிறைய விஷயங்களை அழகிய தமிழில் பகிர்ந்து கொள்கிறார்.
கவிதைக்காரன்டைரி இளங்கோ... குறுகிய அடிகள் மற்றும் வித்தியாசமான கற்பனைகள் கொண்ட கவிதைகள் எழுதுகிறார்... நான்கு மாதங்களில் இருநூறு கவிதைகள் பதிந்திருக்கிறார்..
நேசமித்ரன் கவிதைகள்... இவரின் கவிதைகள் மிகவும் ஆழமானவை.. ஈழத்தின் வலிகளைப் பதிந்து வருகிறார்...
நளன் என்கிற குட்டிச்செல்வன்... மென்சோகம் இழையோடும் அமைதியான கவிதைகளின் சொந்தக்காரர்.

பிறந்தநாள் மகிழ்ச்சியைக் குட்டிக் குட்டியாய் உடைத்து வண்ணக் காகிதத்தில் சுற்றி மிட்டாயுடன் நீட்டும் ஒரு சிறுமியின் மகிழ்ச்சியுடன் உங்களுக்கான வண்ணத்துப்பூச்சிகளை அனுப்புகிறேன். நன்றி

நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்
நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!

10 June, 2009

பொம்மைபயணத்துடனேயே தொடங்கின
எதிரிருக்கைச் சிறுமியின் கேள்விகள்..
பின்னோக்கியோடும் மரங்கள்..
வெகுநேரமாய் உடன்வரும் மேகம்..
அபாயச் சங்கிலியின் அவசியம்..
அடுத்த இருக்கைத் தாத்தாவின்
ஆங்கில நாளிதழென
எதையும் மறவாமல்
வினாக்கள் எழுப்பினாள்..

சிறிதுநேரம் பேசிவிட்டு
அமர்ந்தபடி தூங்கிப்போன
அம்மாவின் முகத்தை
அதிசயமாய் நோக்கிப்பின்
எதுவும் பேசாமல்
இறுக அணைத்துக் கொண்டாள்,
கிடத்துகையில் மூடி
நிமிர்த்துகையில் திறக்கும்
நீலவிழி கொண்ட பொம்மையை.

நிறுத்தமொன்றின் இணைப்பாதையில்
இளைப்பாறிய வண்டியின் சன்னலில்
இவளைக் கண்டதும் கையசைத்தாள்
இதே போன்ற பொம்மையுடன்
இன்னுமொரு சிறுமி.

இடிபாடுகளில்..


*
தலைமுறைகள் கண்ட
தெருமுனை வீட்டை
இடிக்கத் தொடங்கியிருந்தார்கள்..

***
நெடுநாட்களாய் மண் கொணர்ந்து
சன்னலின் மூலையில்
கூடு செய்த குளவிக்கு
எவரும் அறிவிக்கவில்லை
அதன்வீடும் தகர்க்கப்படுவதை..
வழிதவறியதாய் வருந்தி
அடுத்தடுத்த வீடுகளில்
அலைந்தபடி இருக்கிறது
குளவி.

***
கோடையில் ஒருநாள் தனக்குக்
குடைபிடித்த குழந்தையுடன்
இன்னொரு சிநேகப் பொழுதை
எதிர்நோக்கி இருக்கிறது
வாசலருகில் வேப்பங்கன்று..

***
தலைமுறைகள் மாறுகையில்
தனை இரசிக்க எவருமற்று
தனித்திருக்கும் மொட்டைமாடியிடம்
இறுதிவரை சொல்லவில்லை
நிலவு தன் நிலையை..

***
நிறைய மகிழ்ச்சியுடன்
நிறங்கள் தெரிவு செய்து
சுவரில் தான் வரைந்த
வண்ணத்துப் பூச்சிக்கு
சிறகொடிகையில்
வலித்திருக்குமென
புலம்பித் திரிகிறாள்
சிறுமியொருத்தி..

***
எதிர்வீட்டுக் கொடியில்
சிறுமியின் பாவாடையில்
சிவப்பாய்க் காய்கின்றன
இழைத்து நெய்யப்பட்ட
பட்டுப்புழுக் கூடுகள்.
*
......


தனிமை கலைத்ததற்காய்
கடிந்து கொள்ளும் காதலர்கள்...
அழுக்கேறிய ஆடைகண்டு
முகம்சுழித்து விலகும்
அழகிய குழந்தைகளின் அம்மாக்கள்..
சிப்பிகள் பொறுக்குவதைச்
சிலநொடிகள் நிறுத்திவிட்டு
சிநேகமாய்ச் சிரிக்கும் சிறுமி...
கடல் வெறித்தபடி
தனிமையில் அழும்
தாடிவைத்த இளைஞன்...
பட்டம் விட்டு விளையாடும்
ஒத்த வயதுச் சிறுவர்கள்...
முகத்தில் சலனமற்று
அனைவரையும் கடக்கிறான்
சுண்டல் விற்கும் சிறுவன்...
என் கவிதைகளுக்குத்தான்
பக்குவம் போதவில்லை
இன்னும்.

02 June, 2009

கனவின் அல்லிப் பதியன்கள்துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...

சந்திப்பின் முடிவில்
பசுமையினிழைகளோடும்
வெண்பட்டுக் கூம்பென
விரிந்திராத மொட்டினைக்
கொடுத்துப் போகிறாய்
குழந்தையின் முறுவலுடன்..

அல்லியை விடவும்
அழகாயிருக்கிறது
அதன் தண்டு...
ஈரம் பொதிந்ததாய்..
இதழினும் பளபளப்பாய் ..
இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

தாயின் இடுப்பினின்று
தரையிறங்க நழுவுமோர்
மழலையின் துள்ளலுடன்
மலர்த்தண்டினின்று
மண்நோக்கி வீழ்கின்றன
நீர்த்துளிகளுடன் சில
கவிதைகளும்..

விடியலின் மின்தடைக்கு
விழி திறக்கையில்
எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் கீழ்
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லித்தாளுக்கு...

ஒப்புமையின் உக்கிரம் தாளாது
உள்ளத்தின் பதியன்களை
அழுகையடக்கி அறுத்தெறிகையில்
அடித்தண்டில் சேறென
அப்பிக்கிடக்கும் வலியை
அகற்றும் திறனில்லை
எனக்கு.

28 May, 2009

அழகு

உடையின் நிறத்தில்
உதட்டுச் சாயமும்
நகையும் செருப்பும்
நகப் பூச்சுமென
நிறங்கள் புசித்து
நீளுமிவ்வாழ்வின்
இன்னுமோர் பிறந்தநாளில்
எதை விடவும்
அழகாய் இருக்கிறது
இரட்டைவரிக் காகிதத்தில்
இதழுக்கொரு நிறந்தீட்டி
மழலையொன்று வரைந்து தரும்
மலரின் வாழ்த்து.

கவனம்


இருசக்கர வாகனத்தை
இயக்கும் தோரணையில்
கைவிரல்கள் மடக்கி
வாயில் ஒலியெழுப்பி
கரையிலோடும் சிறுவனின்
கவனமீர்க்க முடியாமல்
மழைக்காலத்து ஏரியை
மௌனமாய்க் கடக்கிறது
விமானமொன்றின் நிழல்..

27 May, 2009

ஒரு வானவில்லின் மரணம்அதுவோர் கார்காலம்..
அம்மன் கோயிலில் திருவிழா..
பள்ளி மறந்த பட்டாம்பூச்சிகள்
பஞ்சுமிட்டாய்களை மொய்த்திருக்க..
ஒற்றைக் கழியில் கடைவிரித்த
உள்ளூர் அண்ணாச்சியின்
உயிர்வளியின் எச்சங்கொண்டு
உடல் பருத்தன பலூன்கள்..

மேற்குக் காதலனின் கதிர்கண்டு
மழைக் காதலி உதிர்த்த புன்னகைக்கு
கிழக்கில் சிறிதாய்க் கொண்டாட்டம்..
சன்னல்வழி வானவில் பருகினோம்
உறவுக்காரச் சிறுமியும் நானும்.
முகந்தெரியாத குழந்தையின் பட்டம்
முத்தமிட முனைந்தது வானவில்லை...

'நாளைய தேர் விழாவில்
எந்தச் சாதிக்கு முதல்மரியாதை'
கலவரம் கக்கிய கேள்வியென்
காதடையும் முன்னரே
கண்ணீர்ப்புகை சன்னல் மறைக்க ..
செவிக்குள் நுழைந்த சிற்றெறும்பாய்
சிறுமியின் புலம்பல் குடைந்தது
'வானவில் புகையில் மறஞ்சு போச்சுக்கா'..

வண்ணத்துப் பூச்சிகளின் நாவில்
வண்ணமெழுதா மிட்டாய்களுடன்
வயிறுடைந்த பலூன்களும்
வருந்திச் சுருங்கின..
வானவில் தொடாத வாலறுந்த பட்டம்
வீதியோரத்து வேம்பின் கிளையிடம்
வெறுமைக் கதை செப்புகையில்
முடிந்து போயிருந்தது கலவரம்...

மறுநாள்..
சாமிகுத்தம் தவிர்க்க
ஏதோவொரு சாதி
தேரிழுத்தது...
அம்மனுக்குப் படைத்த
சர்க்கரைப் பொங்கல்
இனித்ததா என்றெனக்கு
ஞாபகமில்லை.

26 May, 2009

காணாமல் போனவை -1


பால்யத்துடன் சேர்ந்து
காணாமல் போயிருந்தது
வயிற்றில் முளைத்து
வாய்வழி வருமென
அஞ்சப்பட்ட திராட்சை விதை..
வருடங்கள் கழிந்தபின்
எதிர்பாராத் தருணத்தில்
மனப் பொந்தினின்று
முளைத்தெழுகிறது
மெல்லிய கவிதையாய்.

23 May, 2009

காதலின் தூக்குமேடைகள்


இருசக்கர வாகனங்களின்
இருக்கையின் பின்கம்பிகளில்...
கூட்டமற்ற திரையரங்குகளின்
கூரை மின்விசிறிகளில்...
கடற்கரையில் வானளக்கும்
பட்டங்களின் வால்களில்..
இரட்டைப் பொருள் பாடல்களின்
ஒற்றைச் சுழிக் கொம்புகளில்...
புதர்கள் மண்டிய பூங்காக்களில்
பதின்மவயதுப் பார்வைக் காந்தங்கள்
பாய்ச்சும் மின்னலை நெளிவுகளில்...
கூட்டுக் குடும்பங்களில்
கடிதம் விநியோகிக்கும்
ஆறரை வயதுத் தூதுவனின்
அரைஞான் கயிற்றிலென...
தத்தம் தலைவிதிக்கேற்ப
தூக்கில் தொங்குகின்றன
பொதுவிடங்களில் காட்சிப் பொருளாகும்
புனிதக் காதல்கள்.

வெற்றிட நிரப்பிகள்

ஊதா நிறப் பூக்களை

உதிர்த்திருந்த மரத்தை

பெருமழையொன்று

பெயர்த்தெறிந்த நாளில்

பிரிவறிவித்தாய் நீ...


மரம், மழை

நான், நீயென

காட்சிகள் குழம்பிய

அன்றிரவின் கனவில்..

விடுதலிலோ விடுபடுதலிலோ

விருப்பமற்றுக்

கவிதையின் மடியமர்ந்து

வெறுமையின் வெளிதனை

வெறித்திருந்தேன்..


விடியலில் ஓர்

பாடுபொருளுக்கான வெற்றிடம்

வெறுமை கொண்டே

நிரப்பப்படுகையில்..

எல்லோரும் அழைத்தாலும்

எனக்கு மனமில்லை

பெருமழையைப்

பேய்மழையென்றழைக்க.

http://youthful.vikatan.com/youth/gowripriyapoem25052009.asp

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1433

நன்றி: யூத்புல் விகடன், உயிர்மை


தேடல்

பாடுபொருளாகவே
பழகிச் சலித்த மழை
பருத்த பலாவேர்களினூடே
உதிர்த்துச் சென்றிருந்தது
உவமேயங்களை..

தேவதைக் கதைகளில்
விளையாடும் சிறுமிகளின்
வெண்பட்டாடை..
வெடித்துக் காற்றேகும் பருத்தி..
வெண் மயிற்பீலி சாமரம்..
தொடுதலில் சிலிர்த்து
விசிறியாய் விரியும்
சிசுவொன்றின் மென்பாதமென..
காளான்களுக்குவமை தேடி
கவிதைப் பெருவெளியில்
கரைந்து தொலைந்தேன் நான்..

30 April, 2009

எதுகை தேடுங்கள்..


கருவுற்றிருக்கும் மயிலிறகு..

கசங்கியதோர் காகிதக்கப்பல்..

கடற்கரையில் கண்டெடுத்த

நட்சத்திர மீன்கூடு..

அழிப்பானின் மூலப்பொருளாய்

அறியப்படும் பென்சில்சீவல்..

மணலில் புரண்டெழுந்து

பேய்முடியீனும் காந்தத்துண்டு..

செந்நிறக் கிளிஞ்சலென

குல்மொஹர் இதழொன்று..

காணும் பொங்கலன்று

தாத்தா தந்த பத்துரூபாய்..

விழுகையில் உடைந்ததும்

உடையாது விழுந்ததுமாய்

முன்வரிசைப் பற்களிரண்டு..

மேசைக்கரண்டியினின்று

இடம்பெயராத எலுமிச்சைக்கு

பள்ளியில் தந்த பதக்கமொன்று..


யாவுமிருக்கும் பென்சில் பெட்டியைப்

பற்கள் கொண்டு நான்

பாங்காய்த் திறப்பதைப்

பரவசமாய்ச் சிலாகித்து

எழுதித் தீர்க்கும் நீங்கள்..

விலையுயர்ந்த மிட்டாயின்

வண்ணம் மங்கிய காகிதத்தை

மறவாமல் எழுதுங்கள்- அத்துடன்..


தனித்தென்னைத்

தின்னச் செய்கையில்

தாயின் கால்கள் பின்நின்று

வேலைக்காரியின் பிள்ளை

விழிமுனையில் சிந்திய

ஏக்கப் பார்வைக்கும்

எதுகை தேடுங்கள்..


வளர்ந்துவிட்ட உங்களுக்கு

வார்த்தை கிடைக்காமலா

போய்விடும்??


http://youthful.vikatan.com/youth/gowripoem090509.asp

29 April, 2009

விழியற்றவனின் முகில்

கருவுற்றிருந்த வானின்
கருமையும் களிப்பும் தாங்கி
கதைத்திருந்த கடலின்
கரையிலென்னுடன் சிநேகமானான்
கார்காலத்துக் காலையொன்றில்....

மூங்கில் துளைவழி
மணல்வெளியெங்கும்
ஊற்றித் திளைத்தான்
உயிரின் கரைசலை....

விடியல்களில் வெறுமைக்கும்
வெயில்சாய்கையில் வறுமைக்கும்
மருந்தாகும் குழல்காண மட்டும்
மறுபிறவி வேண்டுமென்றான்...

கூடுடைத்துப் புறப்படும்
வண்ணத்துப்பூச்சியாய்...
ஓடுடைத்து வெளிவரும்
குயிலொன்றின் குழந்தையாய்...
விளைநிலம் பிளந்து
விதையொன்று துளிர்ப்பதாய்..
குழலிசைக்கு நான்செய்த
ஒப்புமைகள் புறக்கணித்தான்...

முகிலொத்தது குழலென்றும்
மழையொத்தது இசையென்றும்..
காலைகளில் முகில்குளிர்ந்தும்
மாலைகளில் முகில்பிழிந்தும்
பொழிவதாய் உவமைகளில்
புதுமை சொன்னான்..

பின்வந்ததோர் பேரிடி நாளில்
விபத்திலவன் மரித்தபின்னர்
முகிலுரியப்பட்ட வானின்
மௌனம் தாளாமல்
கடற்கரை தவிர்த்தும்...

பயணங்கள் யாவிலும்
தொடர்வண்டியின் உட்கூரையைக்
கடந்து போகின்றன
குளிராது பொழியும்
முகில்கள்...

21 April, 2009

மருதோன்றி இரவொன்றில்..

உன் நேசம் அளக்கும்

உள்ளங்கை மருதோன்றி

சிவந்திராத காலைகளில்

உடைந்தழும் என்னிடம்

பவழமல்லிக் காம்பும்

புலர்வானின் நிறமும்

அடர்சிவப்பினும் அழகென்று

ஆறுதல் சொன்னாய்...


பிரியங்கள் பிளவுண்ட இந்நாளில்

பின்னிரவின் உறக்கம் உறிஞ்சி

உலராதிருக்கும் மருதோன்றி

உன் நினைவின் ஈரங்களை

உள்ளங்கை நரம்புகளில்

ஓயாமல் எழுதுகையில்

தனித்திருக்கும் எதுவும்

நட்பாகிவிடுகிறதெனக்கு...


ஒற்றையாய் நட்டவன் மேல்

ஊமைக் கோபமும்..

விரிந்திடும் விதியற்ற

வேரின் வியர்வையும்..

தொட்டிச் செடியொன்றின்

பூவிதழில் துளிர்க்கிறது..


கொல்லைக் கிணற்றில்

கொதிக்கும் பாதரசமாய்க்

குழைந்து நெளியும் நிலவும்..

சிறுவர் வண்டியில்

சேர்க்கப்படாது

தனித்து மிதக்குமோர்

நுங்குக் குவளையும்..

தத்தம் வெறுமையைத்

தமக்குள் பகிர்கின்றன...


கடந்து போன பூனையின்

கால் எதையோ இடறிட..

அலைகள் மறுக்கப்பட்ட

ஆழியின் துயரத்தை

உப்பளத்து நீருமிழ்ந்த

உவர்ப்புத் துகள்கள்

உடைந்த குடுவையிடம்

உரத்துக் கூற....


மனதின் இறுக்கத்தில்

மறுகாது தப்பிட

நுணுங்கி விரியும்

நுரையீரல் பூக்களின்

நீள்மூச்சுக் கூட்டங்கள்

அளந்து தோற்கின்றன

இவ்விரவின் நீளத்தை..


வியப்புகள் கொணரும் விடியலில்..

காட்சிப் பிழையொன்றின்

சாத்தியங்கள் களைந்த பின்பும்

குங்குமமாய்ச் சிவந்திருந்த

கைகளுக்குள் அழுகிறேன்

அளந்திட ஏதுமற்று...


http://youthful.vikatan.com/youth/gowripriyapoem23042009.asp

நன்றி: விகடன். காம்

19 April, 2009

வலிமழையாடி உயிர் நனைந்த

மழலையிடம் சினங்கொண்டு

கதவடைத்த பெற்றோர்முன்

மனம் வெதும்பிய பிள்ளையின்

கடைவிழிநீர் காணும்வரை

குடைக்கம்பிகள் குத்தியதும்

வலித்ததில்லை மழைக்கு..

நானறிவேன்,அன்று முதல்

எவருமறியாமல் வந்து

இரவுகளின் வெறுமை மட்டும்

இருட்டில் நனைக்கிறது மழை..

புதிதும் பழையதும்

என்னைப் பெற்றவளின்
ஏழாவது பிள்ளை என்
இடுப்பிருந்து நழுவுகையில்
சிவப்பொளிக்குப் பணிந்தது
சீறி வந்த மகிழுந்து..

சன்னல் கண்ணாடி இறக்கி
சாலையை வெறித்த மனிதர்
சட்டைப்பைக்குள் கைவிட
சட்டெனப் பூத்ததென் மனது.

"இவரும் இவரைப்போல்
இன்னும் நாலு பேரும்
இரக்கம் கொண்டு ஈந்திட்டால்
இரண்டு நாள் உலர்ந்த வயிறு
ஈரம் கண்டு உறங்கப் போகும்"

ஏளனப் புன்னகையுடன்
எதையோ அவரெடுத்து
இதழிடுக்கில், விரலிடுக்கில்
வைத்தெடுத்து, புகைவிடுத்து
விளையாடத் தொடங்குகையில்...

புதிதாய் உணர்ந்து கொண்டேன்
புகையிலை கருகும் வாசம்- உடன்
புன்னகை கருகும் வாசமும்...
பின்னது எனக்குப் புதிதல்ல.

மழைக்கனவுமயிலிறகு சேகரிக்கும் சிறுவராய் மாறி
மரக்கிளைகள் ஆர்ப்பரிக்கக் கூடும்...

உச்சாணிக்கிளை முதல் ஊசிவேர் ஈறாக
உவகையில் ஊறிடவும் கூடும்...

தூக்கனங்குருவிகள் தூவும்மழை ருசிக்க
வான்நோக்கி வாய்திறக்கக் கூடும்...

மரம்நீத்த சருகுகள் மழைமணம் தாங்கிய
மண்ணுடன் மையல் கொள்ளக்கூடும்...

சிற்றிலை மடியுறங்கும் சிரைகள்
சிலிர்த்துகண் விழித்திடவும் கூடும்...

அடுக்குமாடிக் குடியிருப்பின்ஆறாவது தளத்தில்
அட்டைப்பெட்டிக்குள் அடைகாக்கும்
சிட்டுக்குருவியின் கனவில்..

மழையெனும் மாமொழியின்
மழலைக் குரல் தாங்கி
தூறல் தரையிறங்கும் வேளை

15 April, 2009

கடல்சாரா நெய்தல்


வட்டமாய் வெட்டுண்ட வானம்..
குவளையின் வடிவொத்துக்
குறுகிய நீர்வெளி....
வாய்முதல் வால் வரை
அணுக்கள் அனைத்திலும்
அப்பிய மௌனம்..
முதல் முடிவற்ற வட்டப்பாதையில்
வழித்துணை ஏதுமற்று
தனித்துழலும் வேளை..
ஈராயிரம் விசாரிப்புகள் தாங்கி
இல்லத்து வெளிச்சுவர் பதியும்
மழலையின் நுனிவிரல் ரேகைகளில்
மறைந்திருக்கக் கூடுமோர்
மொழியற்ற கவிதையின் முதலிழை..
கண்ணாடிக் குவளையுள்
கடல்சாரா மீனின்
கவி நெய்தலிலுண்டு
புரிதலின் எல்லைகள் கடந்த
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

நன்றி:உயிர்மை

03 April, 2009

..........


விழிகள் விரித்து
விற்புருவம் உயர்த்தி
மாயக் கதை கேட்ட
மழலையின் நெற்றியை
இருநொடிகள் பகுத்துப் போகும்
எழில்மிகு சுருக்கங்களொத்து
செவ்வகத் துண்டுகளாய்ச்
செவ்வானைப் பிரித்திருந்த
சன்னலின் குறுக்குக் கம்பிகளில்...
அனுமதி கோராது
அறையுள் பிரவேசித்த
அறிமுகமற்ற மரமொன்றின்
அழகிய சருகின் நுனி
எழுதிப் போனது
இக்கவிதையை.

01 April, 2009

வெங்காயம் சமையலுக்கில்லை

வெண்டைப் பொரியலில் சேர்த்த
துருவிய தேங்காய் ஏனோ
தும்பைகள் பூத்த புல்வெளியாய்த்
தோன்றிய நொடியில்தான்
வாணலியின் விளிம்புகள் தாண்டி
வந்து குதித்ததொரு கவிதை..

அடுக்களை வெறுத்து
அடைக்கலம் ஆனது
அழிப்பான் உற்பத்திக்கு
அன்புமகள் சேகரிக்கும்
கூம்புகளாய்ச் சுருண்டிருந்த
பென்சிலின் துருவலுக்குள்....

அலுவலகக் கவலைகளில்
அமிழ்ந்திருந்த இரவில் மீண்டும்
ஆள்காட்டி விரல் வந்து
அமர்ந்திருந்த கவிதை
"எப்போது என்னை
எழுதுவாய்" என்றதும்
ஐந்தறைப் பெட்டிக்குள் அதை
அலுப்புடன் அடைத்தேன்..

அடுத்த விடியலின்
அவசரப் பொரியலில்
அவரையுடன் தீய்ந்தன என்
கவிதைத் துருவல்கள்...

பிழை எனதுதான்..
பென்சில் பெட்டியில் அது
பிழைத்திருக்கக் கூடும்..
விழிநீரின் காரணம்
விளக்கிட விரும்பாமல்
வெங்காயம் நறுக்கத் தொடங்கினேன்
.

27 March, 2009

பிழைபொறுத்தல்


கவிதை சமைக்கையிலே
சிந்தை கலைப்பதற்கும்..
நாள்காட்டி ஓரங்களில்
நாய்க்குட்டி வரைவதற்கும்..
கூட்டாஞ்சோறாக்க
தீப்பெட்டி கேட்பதற்கும்..
காகிதப் பைகளிலே
காற்றூதி வெடிப்பதற்கும்..
அழிப்பான் தேடப்போய்
அலமாரி கலைப்பதற்கும்..
கடிந்து கொள்ளப்படும்
குழந்தைகள் எவரும்
காகிதக் கப்பல்கள்
கவிழும் வேளைகளில்
மறந்தும் பழிப்பதில்லை
மழையை.

24 March, 2009

உதிர்ந்து போன உவமைகள்


வெள்ளமெனச் சுழிந்தோடும்
வெறுமைப் பேராற்றின்
ஓரம் ஒதுங்கி நிற்கும்
ஒற்றைச் சருகின் சிரைகளை
உன் உள்ளங்கை ரேகைகட்கு
உவமைசெயத் துணிவில்லை எனக்கு...
தனிமைப் படுகையின்
மௌனப் பந்தலின் கீழ்
கவிதைகள் இம்முறை ஏனோ
கனன்றே கொல்கின்றன.

22 March, 2009

...


புங்கைமர இலையினின்று
புலம்பெயர்ந்து சென்றுவிட்ட
பெயர் தெரியாப் பூச்சியின் கூட்டில்..

வெயில்பிளந்த தரையிடுக்கில்..
வெளிச்சுவரின் வெடிப்புகளில்..

தூறல்கண்டு காலியான
துணிக்கொடியின் முடிச்சுகளில் ..

முகிலின்துளி தாங்கியதால்
முற்றத்தில் மறுக்கப்பட்டு
முன்கதவில் சாய்ந்துநின்ற
முகஞ்சுருங்கிய குடைமடிப்பில்....

கடுங்காற்றில் தெருவொதுங்கிய
காகிதத்தில் துயில்கொண்ட
ஓவியக் குழந்தையின்
உள்ளங்கைப் பள்ளங்களில்..

உடன்கொணர்ந்த கவிதைகளை
ஊற்றிச் செல்கிறது மழை...

தேய்பிறைகள் தித்திக்கும்


உயர்கல்வித் தேர்வொன்றின்
உக்கிரத்தில் துவண்டபின்
தொடர்வண்டிப் பயணத்தில்
துவங்கியதோர் இரவில்
தேய்பிறையைத் தோல்வியென
உருவகித்துறங்கினேன்..

மறுநாள் விடியலின் மலைக்குகைப் பாதையில்
மருண்டு மீண்டநொடியிலவள்
மழலை விழியுடன் சிநேகித்தேன்..

வழிதோறும் ஆடுகளைக் கம்பளிக்கும்
மின்கம்பிக் காக்கைகளை மைகேட்டும்
உத்தரவுக் கவிதை சில

உச்சரித்தாள்...
மடிக்கணினியில் லயித்திருந்த
பெற்றோரின் விழிதப்பி
சன்னல் வழி நீண்டதவள்
பிஞ்சுக்கை தீண்டவென
பெய்து தீர்த்ததொரு சிறுமேகம்.

தரைதுடைத்த சிறுவனிடம்
அவள் நீட்டிய மிட்டாயின் நிறம்கடத்தி
அந்திவானம் நெய்தது
அடர்மஞ்சளாடையொன்றை..

சிறுகை விரித்து சிறகுகள் பரப்பி
தேவதைக் கதைகள் செப்பியபின்
மயிற்பீலி ஒன்றைஎன் புத்தகம் நுழைத்து
குட்டிகள் ஈனுமென வரமளித்தாள்..

அவள் சிந்திய ஆங்கிலத்தில்
வைரமான விண்மீன்கள் சூழ
பாதியவள் உண்டுவைத்த
பால்சோற்றுக் கிண்ணமொத்து
எழுந்துவந்த தேய்பிறை முன்
என் எழுதுகோல் முகிலாகி
காகிதப் பரப்புகளில்
கவிதை தூறத்தொடங்கியது

இன்னுமொரு பாடுபொருள்


பட்டம் விடுகையில் துவங்கிய

பனிக்கட்டி மழையின் துகளை

பெருமையாய்ச் சேகரித்து

பென்சில் பெட்டியில் வைத்துவிட்டு

அண்ணன் திருடியதாய்

அடுத்தநாள் அழுகிறாயே...

வேண்டுமானால் உன்

கடைவிழி நீர் பிடித்து

கவிப்பதனப் பெட்டியில்

குளிரூட்டி வைக்கட்டுமா?

பிறிதொரு கோடையில் மீண்டுமது

பாடுபொருளாய்ப் பயன்படக்கூடும்

நிலையாமை இனிக்கவும் கூடும்


முயலொத்த பூனைக் குட்டிகள்
முறித்திடும் மென்மைச் சோம்பலில்..

கனவில் சிலநொடி கடவுள் வருகையில்
களித்திடும் சிசுவின் சிரிப்பில்..

மழலை விரல்கள் மையிட்டெழுதும்
மரப்பாச்சி பொம்மையின் பொட்டில்..

மார்கழிக் கோலத்துப் பரங்கிப் பூவின்
மடியில் தேங்கிடும் மழையில்..

வெயிலெனும் கோடரி மழைத்துளியுடைக்க
வெகுதூரத்து வானவில் காட்டும்
வெள்ளொளியின் வர்ணப் பிளவில்..

பெருநெல்லியின் கருப்பை திறந்து
பின்நாக்கில் பிறக்கும் இனிப்பில்..

காற்றுச் சிற்பியின் கலைவண்ணத்தில்
நொடிக்கொரு வடிவுறும் முகிலில்..

உடையத் தெரிந்தும் உடையாதிருக்கும்
ஊடல் நீரின் மௌனக்குமிழியில்..

கடுங்குளிர் இரவின் கவிதை முரணாய்
கண்ணாடிச் சன்னலின் வியர்வையில்..

நிலையாமை வலிப்பதில்லை
பாடுபொருட்களின் வாழ்க்கைக்குறிப்பில்.
.

ஓர் ஓவியம், ஒரு கவிதை


சதுரத்தின் மேல் முக்கோணம்
சட்டென வீடாய் மாறிட..
வட்டங்களும் சில கோடுகளும்
வடிவம் பெற்றன மக்களாய்..

நாலரை வயது மழலைக்கிறுக்கலில்
மேகங்களும் சில கூடின..

மழலையின் ஓவிய முகில்கள் திறந்து
மழைவரும் நொடியில் கவிசெய
மனமேங்கிக் காத்திருந்தேன்...

நேற்றைய மழையில் ஆடியபோது
கதவடைத்துக் கத்திய தன் தாயின்
நினைவுடன் நின்றுபோனது ஓவியம்.
மழலைவானம் மழை காணவில்லை..

கனவுக் கருவறைக்குள்
கார்முகில்துளி கால்பதிக்கையில்
கவிதைக் குழந்தைக்காய்
களிப்புடனே காத்திருந்தும்
கண்ணீர் மட்டும் பிறக்கக்கண்டு
கசங்கிப்போயின என் காகிதங்கள்...

பெரியவர்களின் முகில்களும்
பெய்யாமல் கலைந்தன.
..
நன்றி உயிர்மை