26 December, 2009

இரட்சிப்பு


விடுமுறை மதியமொன்று
விரிந்திருந்தது
தொலைக்காட்சியின் முன்..
அருகில் படம் வரையும் மகளுடன்
அவ்வப்போது கதைத்தபடி..

முனை மழுங்கிய
முக்கோணக் குன்றுகள்
இரண்டினுள் ஒன்றில்
இருந்தது நதிமூலம்...
நெளிந்திறங்கிய இணைகோடுகள்
நீள் நதியென அடிவாரத்தில்..
குழிந்த கோடொன்றைப்
படகெனச் செலுத்தினான்
வட்டத் தலையின் கீழ்
குச்சிக்கைகள் கொண்டவன்..
இலை போன்ற ஏதோவொன்று
முன்புறத்தில் கண் மற்றும்
முக்கோண வால் கொண்டு
மீனெனப் பட்டது..
வாலிணைந்த வளைகோடுகள்
வானளந்தன இரண்டிரண்டாய்
சென்டிமீட்டர் சுற்றளவுச் சூரியனருகில்..

தடாகமீன் கவ்விச் சென்றது
தாழப்பறந்த நாரையொன்று..
தொலைக்காட்சியினின்று விழி மீள்கையில்
மில்லிமீட்டர் சிறகுப் பறவைகள்
அவசரமாய் அழிக்கப்பட்டிருந்தன
அழிப்பான் அல்லது உமிழ்நீர் கொண்டு.

15 December, 2009

சிறுமிகள் விழுங்கும் சூரியன்கள்


வழியோரத்து நீர்நிலைகளில்
வண்ணங்குழைத்தபடியோ
தொலைவிருக்கும் பனைகளின்
தலை யுரசியபடியோ
நீலத்தினூடே செவ்விழைகளை
நெய்து திரிந்தபடியோ
தொடர்வண்டிப் பயணங்களில்
துவளாது உடன்வந்தும்..
நிலவுடன் ஒப்பிடுகையில்
கதிரவன் என் கவிதைகட்கு
அந்நியந்தான்..

பயணத்தில் ஜனிக்கும் இவ்விடியலில்
அருகருகிலிருக்கும் இரு முகில்களில்
ஒன்றைத் தனதென்றும்
மற்றொன்றை யெனதென்றும்
மழலைப் பிரகடனம் செய்கிறாள்
எதிர் இருக்கைச் சிறுமி..

ஒட்டியவை போலிருக்கும்
பிஸ்கட்டுகளைப் பிரித்து
இடையிருக்கும் செம்மஞ்சள்
வட்டத்தை விழுங்கிப் பின்
சிரித்தபடி செப்புகிறாள்
சூரியனை விழுங்கியதாய்..

எமதிரு முகில்களிடை
இயல்பாய் ஒட்டிக்கொண்ட
சூரியனைப் பிரித்தெடுத்து
விழுங்கத் தொடங்குகிறதொரு
கவிதை.

நன்றி- உயிரோசை

12 December, 2009

இடமாற்றம்


உணவு இடைவேளையில்
ஒன்றாய்ச் சாப்பிடுகையில்
மஞ்சளாடைச் சிறுமியின் கிண்ணத்து
மாதுளை முத்துக்களும்
சிவப்பு ஆடை அணிந்தவளின்
சோளக்கதிர் முத்துக்களும்
உருவம் ஒத்திருப்பதாய்த்
தமக்குள் பேசிக்கொண்டனர்..
அருகிலிருக்கும் அம்மாக்களின்
அனுமதி பெற்று
இடம் மாற்றிக் கொண்டனர்
கிண்ணங்களை.

எவரையும் கேட்காமல்
இடம் மாறிக் கொண்டன
அம்மாக்களின் புன்னகைகள்.

11 December, 2009

இறகு


முகில்கள் திரண்டிருந்ததோர்முற்பகலில்

பீலிகளற்ற பெண்மயிலொன்று

பூங்காவில் தனித்தலைகையில்

முதன்முதலாய்க் காணலுற்றோம்

நான் அவனையும்,
அவன் மயிலையும்..

விழிகள் சுருக்கி
இதழ்கள் பிதுக்கி
பாடநூல்கள் காட்டியது
இதுவல்ல என்பதாய்
ஓயாமல் புலம்பினான்..
ஏதோ நினைத்தவனாய்
புத்தகப்பையினின்று
இறகொன்றையெடுத்து
அதனருகில் இருத்திப்பின்
தந்தையின் விரல்பிடித்து நடந்தான்..

உருவமற்றதோர் இறகு
முளைக்கத் தொடங்கியது
என் எழுதுகோலின் முதுகில்.