27 March, 2009

பிழைபொறுத்தல்


கவிதை சமைக்கையிலே
சிந்தை கலைப்பதற்கும்..
நாள்காட்டி ஓரங்களில்
நாய்க்குட்டி வரைவதற்கும்..
கூட்டாஞ்சோறாக்க
தீப்பெட்டி கேட்பதற்கும்..
காகிதப் பைகளிலே
காற்றூதி வெடிப்பதற்கும்..
அழிப்பான் தேடப்போய்
அலமாரி கலைப்பதற்கும்..
கடிந்து கொள்ளப்படும்
குழந்தைகள் எவரும்
காகிதக் கப்பல்கள்
கவிழும் வேளைகளில்
மறந்தும் பழிப்பதில்லை
மழையை.

24 March, 2009

உதிர்ந்து போன உவமைகள்


வெள்ளமெனச் சுழிந்தோடும்
வெறுமைப் பேராற்றின்
ஓரம் ஒதுங்கி நிற்கும்
ஒற்றைச் சருகின் சிரைகளை
உன் உள்ளங்கை ரேகைகட்கு
உவமைசெயத் துணிவில்லை எனக்கு...
தனிமைப் படுகையின்
மௌனப் பந்தலின் கீழ்
கவிதைகள் இம்முறை ஏனோ
கனன்றே கொல்கின்றன.

22 March, 2009

...


புங்கைமர இலையினின்று
புலம்பெயர்ந்து சென்றுவிட்ட
பெயர் தெரியாப் பூச்சியின் கூட்டில்..

வெயில்பிளந்த தரையிடுக்கில்..
வெளிச்சுவரின் வெடிப்புகளில்..

தூறல்கண்டு காலியான
துணிக்கொடியின் முடிச்சுகளில் ..

முகிலின்துளி தாங்கியதால்
முற்றத்தில் மறுக்கப்பட்டு
முன்கதவில் சாய்ந்துநின்ற
முகஞ்சுருங்கிய குடைமடிப்பில்....

கடுங்காற்றில் தெருவொதுங்கிய
காகிதத்தில் துயில்கொண்ட
ஓவியக் குழந்தையின்
உள்ளங்கைப் பள்ளங்களில்..

உடன்கொணர்ந்த கவிதைகளை
ஊற்றிச் செல்கிறது மழை...

தேய்பிறைகள் தித்திக்கும்


உயர்கல்வித் தேர்வொன்றின்
உக்கிரத்தில் துவண்டபின்
தொடர்வண்டிப் பயணத்தில்
துவங்கியதோர் இரவில்
தேய்பிறையைத் தோல்வியென
உருவகித்துறங்கினேன்..

மறுநாள் விடியலின் மலைக்குகைப் பாதையில்
மருண்டு மீண்டநொடியிலவள்
மழலை விழியுடன் சிநேகித்தேன்..

வழிதோறும் ஆடுகளைக் கம்பளிக்கும்
மின்கம்பிக் காக்கைகளை மைகேட்டும்
உத்தரவுக் கவிதை சில

உச்சரித்தாள்...
மடிக்கணினியில் லயித்திருந்த
பெற்றோரின் விழிதப்பி
சன்னல் வழி நீண்டதவள்
பிஞ்சுக்கை தீண்டவென
பெய்து தீர்த்ததொரு சிறுமேகம்.

தரைதுடைத்த சிறுவனிடம்
அவள் நீட்டிய மிட்டாயின் நிறம்கடத்தி
அந்திவானம் நெய்தது
அடர்மஞ்சளாடையொன்றை..

சிறுகை விரித்து சிறகுகள் பரப்பி
தேவதைக் கதைகள் செப்பியபின்
மயிற்பீலி ஒன்றைஎன் புத்தகம் நுழைத்து
குட்டிகள் ஈனுமென வரமளித்தாள்..

அவள் சிந்திய ஆங்கிலத்தில்
வைரமான விண்மீன்கள் சூழ
பாதியவள் உண்டுவைத்த
பால்சோற்றுக் கிண்ணமொத்து
எழுந்துவந்த தேய்பிறை முன்
என் எழுதுகோல் முகிலாகி
காகிதப் பரப்புகளில்
கவிதை தூறத்தொடங்கியது

இன்னுமொரு பாடுபொருள்


பட்டம் விடுகையில் துவங்கிய

பனிக்கட்டி மழையின் துகளை

பெருமையாய்ச் சேகரித்து

பென்சில் பெட்டியில் வைத்துவிட்டு

அண்ணன் திருடியதாய்

அடுத்தநாள் அழுகிறாயே...

வேண்டுமானால் உன்

கடைவிழி நீர் பிடித்து

கவிப்பதனப் பெட்டியில்

குளிரூட்டி வைக்கட்டுமா?

பிறிதொரு கோடையில் மீண்டுமது

பாடுபொருளாய்ப் பயன்படக்கூடும்

நிலையாமை இனிக்கவும் கூடும்


முயலொத்த பூனைக் குட்டிகள்
முறித்திடும் மென்மைச் சோம்பலில்..

கனவில் சிலநொடி கடவுள் வருகையில்
களித்திடும் சிசுவின் சிரிப்பில்..

மழலை விரல்கள் மையிட்டெழுதும்
மரப்பாச்சி பொம்மையின் பொட்டில்..

மார்கழிக் கோலத்துப் பரங்கிப் பூவின்
மடியில் தேங்கிடும் மழையில்..

வெயிலெனும் கோடரி மழைத்துளியுடைக்க
வெகுதூரத்து வானவில் காட்டும்
வெள்ளொளியின் வர்ணப் பிளவில்..

பெருநெல்லியின் கருப்பை திறந்து
பின்நாக்கில் பிறக்கும் இனிப்பில்..

காற்றுச் சிற்பியின் கலைவண்ணத்தில்
நொடிக்கொரு வடிவுறும் முகிலில்..

உடையத் தெரிந்தும் உடையாதிருக்கும்
ஊடல் நீரின் மௌனக்குமிழியில்..

கடுங்குளிர் இரவின் கவிதை முரணாய்
கண்ணாடிச் சன்னலின் வியர்வையில்..

நிலையாமை வலிப்பதில்லை
பாடுபொருட்களின் வாழ்க்கைக்குறிப்பில்.
.

ஓர் ஓவியம், ஒரு கவிதை


சதுரத்தின் மேல் முக்கோணம்
சட்டென வீடாய் மாறிட..
வட்டங்களும் சில கோடுகளும்
வடிவம் பெற்றன மக்களாய்..

நாலரை வயது மழலைக்கிறுக்கலில்
மேகங்களும் சில கூடின..

மழலையின் ஓவிய முகில்கள் திறந்து
மழைவரும் நொடியில் கவிசெய
மனமேங்கிக் காத்திருந்தேன்...

நேற்றைய மழையில் ஆடியபோது
கதவடைத்துக் கத்திய தன் தாயின்
நினைவுடன் நின்றுபோனது ஓவியம்.
மழலைவானம் மழை காணவில்லை..

கனவுக் கருவறைக்குள்
கார்முகில்துளி கால்பதிக்கையில்
கவிதைக் குழந்தைக்காய்
களிப்புடனே காத்திருந்தும்
கண்ணீர் மட்டும் பிறக்கக்கண்டு
கசங்கிப்போயின என் காகிதங்கள்...

பெரியவர்களின் முகில்களும்
பெய்யாமல் கலைந்தன.
..
நன்றி உயிர்மை