19 September, 2019

வேனிலின் சுடர்கள்





கங்குச்சட்டியில் வாடும்
கதிர் சோளக் கூம்பினின்று
கடற்கரை வெளியேகும்
தகிக்கும் தங்கச் சுடர்கள்.

கொன்றை மஞ்சரிக் கூம்பு நீங்கி
கொதிகானலில் நெளிந்தாடித்
தரைநோக்கிப் பயணிக்கும்
தணிந்த தங்கச் சுடர்கள்.

இரவோடும் பகலோடும்
கடலோடும் கானலினூடும்
தகித்திருக்கையில் தணிந்ததையும்
தணிந்திருக்கையில் தகிப்பதையும்
சடசடப்பதையும் சப்தமற்றதையும்
ஒன்றே போலத் தழுவித் திரிகிறான்
காற்றெனும் மாய முதுகிழவன்.



நன்றி: யாவரும்

09 September, 2019

பிள்ளையார்களின் கடல்




குறு முகவாய் தொட்டு
மரத்தோள் தடவி
படகினைத் தள்ளும்
மீனவன் விரலில்
மத்தகம் வருடிப் பின்
முதுகிலேறும் பாகனின் பரிவு.

கரை நீங்கிக் கடலேகும் படகுக்கோ
மண்டியிட்டெழுந்து முன்நகரும்
யானையின் துதிக்கைத் துள்ளல்..

களிறாகிப் படகாகிக்
கடல் நீந்தி முதல்நாடும்
கரிமுகத்தில் ஒரு
பெரும்பரிவின் துள்ளல்.

23 May, 2019

சிறுமாயம்






மினுங்கும் இளஞ்சிவப்பில்
மென்தகடுகள் தைத்த
தேவதையின் ஆடையைச்
சன்னல் வழியேகித் தழுவும்
சிதறும் பேரண்டத்தின்
சின்னஞ்சிறு கற்றைக் கதிர்.

எதிரொளிக்கும்
சுவரெங்கும் சுழன்றொளிரும்
குங்குமப்பூ குழைத்த
குட்டிப் பால்வீதி.

19 May, 2019

....

பௌர்ணமிக் குளத்தில்
பொரி தூவும் பாப்பா..
கரும்பச்சை வானெங்கும்
நீள்வட்டத் தாரகைகள் ..
மீன்கடித்த வடுதாங்கி
மிதந்திருக்கும் நிலவு.

ஒற்றைச்சரம்


விபத்தின் பின்வரும் கோடையில்
வீட்டுச்சிறை வாய்க்கிறது
நமக்கு.
சன்னல்கள் யாவையும் அடைத்தபின்
இயக்குகிறாய்
மெலிதாய் ஒளிரும்
ஒற்றைச்சர விளக்கை.
இருளினூடும் ஒளியினூடும்
தடுமாறும் தருணமொன்றில்
ஒளிச்சரம் குறிக்க
நிகழ்கிறது
அட்டகாசம் என்ற சொல்லின்
உனது முதல் பிரயோகம்.
இத்தனை பெரிய உலகும்
இத்தனை ஒளிரும் பகலும்
இத்தனை பழகிய மொழியும்
விடுத்தமைகிறேன்
உனது சிற்றறைக்குள்..
உனது சிற்றொளிக்குள்..
உனதொற்றைச் சொல்லுக்குள்.

08 February, 2019

மாவடுக்காலம்

பட்டுப்பூச்சி போல் பாவித்து 
புறங்கையில் இமை உரசிப்
புன்னகைக்கும் மாயாவைப் போல்
மாடிச்சுவர் உரசி நிற்கிறதிந்த
பசுமஞ்சள் மாமஞ்சரி.

தாழ்ந்த கிளையொன்றின் மாவடுவைத்
தாவிப் பறிக்கும் மாயா,
உள்ளங்கைக்குள்  உய்விக்கிறாள்
ஒரு நெடுங்கோடையின்  காதையை.

ஆடிக்களித்த பெருவெளி
அந்நியமாகும் தினத்தை..
விளைநிலம் விட்டொழிந்து
வேறெங்கோ வீழ்தலை..
உப்பு நீரில் ஊறியூறி
உலர்ந்து கிடத்தலை..
சுவை மொட்டுகள் முன்மொழியும் மதிப்பீடுகளை..
ஒப்பனைச் சொற்கள் பூண்ட
ஒப்பீட்டுச் சந்தைகள்
ஒவ்வாது புழுங்குமொரு பொழுதை என
மயிற்பீலிகள் பிரசவிக்கும்
மாயாவின் பேழைக்குள்
கனவிலும் மாவடு காண்பதற்கில்லை
கனலும் பாலைப் பொழுதுகளை.

பருவங்களை உறைவிக்கும்
திறனற்றதொரு வேனிற் கனவில்
மாவடு ஆகிறாள் மாயா,
மாயாவாகிறேன் நான்.

சிறு மனம்





நிறைய நிறையக்
குறையும்
நிறைதலைப் பறையும்
ஒலி.


..


அம்மாவும் அப்பாவும் 
அருகிலற்ற பொழுதுகள் 
அத்துணை தனிமையில்லை 
இந்நாட்களில்!

பெருநகரத்தின் உயிரற்ற
சனிக்கிழமை யொன்றில்
பாண்டி விளையாடப்
பழகிவிட்டாள் இனியா,
அடுக்ககத்துச் சுவர்களின்
அடுத்தடுத்த செவ்வகங்களில்
அலைந்து கிடக்கும்
பகல் நிலவுடன்!

பிறழும் பிறைகள்




உறங்கா நிசிகளின் 
இருள் கொஞ்சம்..
கொதித்து வற்றிக்
கருகியதன் மிச்சம்..
உரைத்து உணராத 
உன்மத்தம்...
யாவற்றின் கருமையையும்
தீண்டித் தீற்றும் காலம்.

தூரிகை உலர்கையி லெஞ்சும்
புரைவிழியின் கீழ் கருவளையம்.
மேலும் கீழுமாய்
நிறம் பிறழும் பிறை.

இனியவை எண்ணில 2



சப்பாத்தி மாவின் ஒரு விள்ளலை
உருட்டித் தேய்த்தபடியும்
குளியல் துண்டைச் சேலையாய் உடுத்தி
ஆசிரியை போல் கதைத்தபடியும்
பெரியவர்களின் உலகினுள்
புகுந்து திரிகிறாள் இனியா..

நீலச் சிறகும்
செம்மஞ்சள் அலகுமாய்
மிதந்து செல்கிறதொரு
பறவைக்குஞ்சு,
இத்துணை பெரிய வானில்
தானே வானாய்.

நீலம்


நீச்சல் குளத்தின் தரைக்கு 
வேறெந்நிறமும் ஒவ்வாதெனினும்
இணக்கமில்லை 
இந்நீலத்துடன்..

குடுவைப்பூ...
குவளை மீன்...
குயவனின் வனைதலுக்கொப்ப
குறுகிக் கிளைக்கும்
உப்பரிகைச் செடி...
போலவே திணறுமிந்த  நீலம்.

மகவீன்று ஒற்றை அறைக்குள்
மனம்பிறழ்ந்தவளின்
கவிச்சொற்களென
நில்லாது நெளியும்
நீச்சல் குளத்தின் தரையிற் புதைந்த
சின்னஞ்சிறு சதுரங்கள்..

மென்மெல்லிய இருதயங்கொண்ட
கவியொருவனின்
மௌனம் நீலம்..

நீலம் மௌனம்
நீலம் ஆழம்
நீலம் அண்டம்..
ஒடுங்கிய வெளியெதற்கும்
உகந்ததல்ல நீலம்.


நீலம் பறவை
நீலம் பரவை..
நீலம் வகுப்பதற்கில்லை
நீலம் வனைவதற்கில்லை
நீலப் பூச்செதற்கும்
நீலத்தின் அழகில்லை.

கதை



இறந்துபட்ட தட்டானின்
சிறகில் ஊடுருவும்
முன்னிரவின் நிலவொளி..

மருத்துவனின் நினைவிலோ
செவிப்பறையின்  ஒளிக்கூம்பு!

இனி
இரவெங்கும் நெய்வதற்குண்டு
ஒலியின் கதை..
ஒளியின் கதை..
வாழ்வின் கதை.

பூட்டிய கதவுகள்

உட்புறம் பூட்டிய 
கதவுகளின் முன் 
வெகுளாதீர்..
மறுகாதீர்..
சபிக்காதீர்... 
கதவின் பின்னிருப்பவர்க்குக் கிட்டும்
ஆகப்பெரிய ஆசுவாசம்
பூட்டிக்கொள்வதாய் மட்டுமே 

இருக்கக்கூடும்.