06 August, 2014

நேரங்காட்டியின் உபரிக்காலம்

வேகம் கூட்டி முடுக்கப்பட்ட நேரங்காட்டி
வெளிச்சத்துக் கெதிர்திசையில்
விரைபவனின் நிழலென
நிஜத்தைப் பின்தள்ளி நகர்கிறது.

வேகம் கூட்டி முடுக்கப்பட்ட நேரங்காட்டி
யாரோ எதையோ வாலில் பொருத்திய ...
கனவினின்று மீண்ட நாய்க்குட்டியென
இன்மையைக் கவ்விட
ஏங்கிச் சுழல்கிறது.



முடுக்கப்பட்ட நேரங்காட்டியின்
இரகசியம் அறிந்தவன்
இமையை மெலிதாய் அழுத்தி
இரண்டு பிம்பங்கள் காணும்
விளையாட்டுச் சிறுவனாகிறான்..

வேகம் கூட்டி முடுக்கப்பட்ட நேரங்காட்டி
முடங்கிப் போகுமொருநாளில்...
தொலையும் முதலலைக்கும்
தொடரும் அடுத்ததற்கும்
இடையில் திரளும் நுரையென....
அடைக்கப்பட்ட பறவையொன்றின்
அடுத்தடுத்த சிறகசைப்பில்
அசைந்தும் அசையாமல்
அலைவுறும் பெருவெளியென ...
கண்டங்கள் கடந்தவனின்
கடைவிழி உறக்கமென ..
பெருமயக்கம் கொள்கிறது
உபரிக் காலம்.



06 July, 2014

காக்கைக் கூட்டின் இழைகள்

விரியும் வயிற்றின் வரிகளை
வெறித்துத் தீர்க்கும் வாடகைத்தாய்,
பிறழ் மனதின் வெளியெங்கும்
பிய்த்தெறிந்து திரிகிறாள்
கருங்குயிலின் மகவு ஏந்திய
காக்கைக் கூட்டின் இழைகளை

மங்கும் வெண்ணிறக் கதைகள்

உருண்டுழலும் அலை வயிற்றில்
ஒற்றைக் கிளிஞ்சலென....

வளைந்த சருகின் முதுகில்
வசித்து விலகிய பூச்சியின் கூடென..

இருந்த இருப்பை
இரையாது கதைக்கும்
கூண் கிழவியின் புரைக்கண் வெண்மை.

28 March, 2014

இடைநிகழ் வெண்ணிலாக்கள்



இம்சிக்கும் நிச்சலனம்..
இளகி விரியும் வட்டங்கள்...
இரண்டுக்கும் இடையில்தான்
நீர்ப்பரப்பை நெகிழ்த்தியது
மீன்குஞ்சின்  மென்முத்தம்.

அசைவறியா வளிப்பூக்களை
அரும்பவிழ்த்துச் சென்றது
சிலிர்த்து வெளியேறிய
சிசுவின்  முதல் விசும்பல்.

அறிந்திராத அன்றைக்கும்
முடிந்திராத இன்றைக்கும்
இடையில் விரிகிறது
வெடித்துதித்த  வானம்.

நிறைதலுக்கும் வடிதலுக்கும்
இடையில் ஒரு துளை..
நிறைதலுக்கும் வழிதலுக்கும்
இடையில் ஒரு துளி..

வெயில் குடித்த விடர்நிலம்
குளிர்ந்து குழையும் முன்பு
பொழிந்து போயிருந்தது
பொதியெனத்  திரண்ட பெருமுகில்..

உணர்ந்ததை உணர்த்தும்
உத்திகள் மழுங்கிய
சொல் வறண்ட வெங்காட்டிடை
சொற்பநேரம் வந்து போயேன்
வெகுநாளாய் வர மறுக்குமென்
வெண்ணிலாக் கவிதையே......