22 March, 2009

நிலையாமை இனிக்கவும் கூடும்


முயலொத்த பூனைக் குட்டிகள்
முறித்திடும் மென்மைச் சோம்பலில்..

கனவில் சிலநொடி கடவுள் வருகையில்
களித்திடும் சிசுவின் சிரிப்பில்..

மழலை விரல்கள் மையிட்டெழுதும்
மரப்பாச்சி பொம்மையின் பொட்டில்..

மார்கழிக் கோலத்துப் பரங்கிப் பூவின்
மடியில் தேங்கிடும் மழையில்..

வெயிலெனும் கோடரி மழைத்துளியுடைக்க
வெகுதூரத்து வானவில் காட்டும்
வெள்ளொளியின் வர்ணப் பிளவில்..

பெருநெல்லியின் கருப்பை திறந்து
பின்நாக்கில் பிறக்கும் இனிப்பில்..

காற்றுச் சிற்பியின் கலைவண்ணத்தில்
நொடிக்கொரு வடிவுறும் முகிலில்..

உடையத் தெரிந்தும் உடையாதிருக்கும்
ஊடல் நீரின் மௌனக்குமிழியில்..

கடுங்குளிர் இரவின் கவிதை முரணாய்
கண்ணாடிச் சன்னலின் வியர்வையில்..

நிலையாமை வலிப்பதில்லை
பாடுபொருட்களின் வாழ்க்கைக்குறிப்பில்.
.

5 comments:

  1. காற்றுச் சிற்பியின் கலைவண்ணத்தில்
    நொடிக்கொரு வடிவுறும் முகிலில்...

    arumaiyana varigal... thodarnthu ezhuthungal... vazhthukkal...

    ReplyDelete
  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சுந்தரராஜன் :)

    ReplyDelete
  3. //வெயிலெனும் கோடரி மழைத்துளியுடைக்க//

    வியக்க வைக்கும் உவமை...

    ReplyDelete
  4. மிக்க நன்றி புதியவன்

    ReplyDelete