07 April, 2010

நிழல் பற்றியவை


மின்தடைக்கு வேர்த்திருக்கிறது
மெழுகுவர்த்தி..
வாசலை அண்டி நிற்கும்
வன்மழை நனைத்த நாய்க்குட்டியைத்
துரத்தும் மனமில்லை எவர்க்கும்..
சற்றைக்கெல்லாம் தயக்கம் துறந்து
உட்சுவரெங்கும்
உலவத் தொடங்குகிறது
வால் குழைத்தபடி
மழையின் நிழல்.

***

ஊதியணைக்கப்படும்
சுடரின் நடனத்தில்
ஒரு கணம் உயிர்த்தசைந்து
உடன் மரிக்கிறது
உலோகப் பறவைச்சிலையொன்று.

***

வரைபடத்து நதிகளென
வளைந்தும் கிளைத்துமிருக்கிறது
இலையுதிர்ந்த மரமொன்றின்
இருளோவியம்..
வெயிலின் கரங்கள்
வெகு நேர்த்தியாய் வரைந்திருக்கும்
பாதி மட்டும் மட்டும் கட்டப்பட்ட
பறவையொன்றின் கூட்டில்
மரத்தடியில் நிற்கின்றன
வர்ணம் பூசப்பட்ட கோழிக்குஞ்சுகள்.

***
உயிர்ச்சத்து வேண்டி
கிடத்தப் பட்டிருக்கிறது குழந்தை
மரச்சட்டங்களின் எல்லை நுழையும்
மஞ்சள் வெயிலின் மடியில்...
சுவர் பற்றி மேலேறி
சூரியக்கற்றைகளை வழிமறித்து
சிசுவின் கன்னத்தில் படர்கிறது
சன்னலோரத்துச் சிறுகொடி.

***

இருசக்கர வாகனத்தை
இயக்கும் தோரணையில்
கைவிரல்கள் மடக்கி
வாயில் ஒலியெழுப்பி
கரையிலோடும் சிறுவனின்
கவனமீர்க்க முடியாமல்
மழைக்காலத்து ஏரியை
மௌனமாய்க் கடக்கிறது
விமானமொன்றின் நிழல்.

*
நன்றி : அகநாழிகை

14 comments:

  1. வாழ்த்துகள் மருத்துவரே

    சொற்களின் தசையில் மச்சமெழுதி பார்க்கும் படிமங்கள் ...

    தொடர்க

    ReplyDelete
  2. இதழிலேயே வாசித்தேன், ரொம்ப அருமையான கவிதைகள். நானும் இப்படி பலப்பல நிழல்களை கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தேன் இதை வாசித்த பொழுது.

    ReplyDelete
  3. /இருசக்கர வாகனத்தை
    இயக்கும் தோரணையில்
    கைவிரல்கள் மடக்கி
    வாயில் ஒலியெழுப்பி
    கரையிலோடும் சிறுவனின்
    கவனமீர்க்க முடியாமல்
    மழைக்காலத்து ஏரியை
    மௌனமாய்க் கடக்கிறது
    விமானமொன்றின் நிழல். /

    அருமை

    ReplyDelete
  4. வாழ்த்துக‌ள் கௌரி

    ReplyDelete
  5. எல்லாமே நல்லா இருக்குது. குறிப்பா கடைசிக்கவிதை ரொம்ப நல்லா..

    @
    நேசமித்ரனின் மறுமொழிதலின் விளையாட்டு அழகு!

    ReplyDelete
  6. கவிதைகள் அத்தனையும் அருமை! வாழ்த்துக்கள் கெளரிப்ரியா!

    ReplyDelete
  7. வாழ்த்துக‌ள் கௌரி.. :-))

    ReplyDelete
  8. அனைத்தும் அழகு ப்ரியா..

    ReplyDelete
  9. கவிதைகள் மிகவும் அருமையாக இருக்கிறது
    ...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. beautiful.. each one of them. :)

    ReplyDelete
  11. அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete