21 January, 2011

ரயில் குறிப்புகள்

தூரத்து மலையில்
காற்றுடன் நெளிகிறது
செந்நிற ரயிலென
காட்டுத்தீ..
மருண்டு வெளியேறும்
மலைமுகட்டுப் பறவையின் விழியில்
வளி கிழித்து விரையக்கூடும்
நீலத்தீயென ரயில்.

***
ஆதிச் சிவப்பு குன்ற
மெதுமெதுவாய் வெண்மை கூட
ஊர்ந்து வளர்கிறது
ரயிலின் வெளியில் பகல்
எதிரிருக்கைச் சிறுமியின்
மருதோன்றி நகம் போல.

***
தயக்கம் ததும்பும் நடை
கழுத்து மினுங்கத் தலையசைப்பு
மிரண்டுருளும் விழிப்பந்து
மென்செருமல் இல்லையெனில் மௌனம் மட்டும்
பேரொலிக்குப் படபடப்பு....
பெருநகரத்து இளைஞனின்
கிராமத்து மனைவியென
நடைமேடையில் திரிகிறது
ரயில் நிலையத்துப் புறாவொன்று.

***
கடைசிப் பெட்டியில்
ரயில் விரையும் திசைநோக்கி இருத்தல்
ரம்மியம்..
வழியின் வரைபடமென
வளைந்துருளும்
முந்தைய பெட்டிகள்..
தடம் மாற்றம் முன்னொலிபரப்பும்
தாளம் பிறழா சக்கரங்கள்..
இருள் மண்டிய குகையெதிலும்
முதல் ஆளாய் நுழைய
ஒருபோதும் நேர்வதில்லை..
பாதை குறித்த,
பாதையறிதல் விளைவித்த,
இறுதியில் இருத்தல் அல்லது
இறுதியாய் இருத்தல் பற்றிய
இம்சிக்கும் பயங்களில்லை.
வாழ்க்கை ரயில் போலில்லை.

***
பயணங்கள் யாவிலும்
சன்னல்கள் கடந்து
பறவைகளாகின்றன விழிகள்..
இமைச் சிறகசைத்தபடி
மலை, மரம், மழை,
வான், முகில், மதி,
கடல், வயல், வனம்,
செந்தீ பிரவகிக்கும்
விடியலின் நதியென
யாவற்றினூடும் விரைகின்றன
ஒவ்வொரு ரயிலுடனும்
சிலநூறு இணைப்பறவைகள்.


9 comments:

  1. மிகப் பிடித்திருந்தது.

    ReplyDelete
  2. //கடைசிப் பெட்டியில்
    ரயில் விரையும் திசைநோக்கி இருத்தல்
    ரம்மியம்..//
    ம்ம் ஆமாம்..
    //
    பாதை குறித்த,
    பாதையறிதல் விளைவித்த,
    இறுதியில் இருத்தல் அல்லது
    இறுதியாய் இருத்தல் பற்றிய
    இம்சிக்கும் பயங்களில்லை.
    வாழ்க்கை ரயில் போலில்லை.//
    ம்ம்...

    //
    தயக்கம் ததும்பும் நடை
    கழுத்து மினுங்கத் தலையசைப்பு
    மிரண்டுருளும் விழிப்பந்து
    மென்செருமல் இல்லையெனில் மௌனம் மட்டும்
    பேரொலிக்குப் படபடப்பு....
    பெருநகரத்து இளைஞனின்
    கிராமத்து மனைவியென
    நடைமேடையில் திரிகிறது
    ரயில் நிலையத்துப் புறாவொன்று.//

    மிக அழகான விவரிப்பு அருமை...

    //பயணங்கள் யாவிலும்
    சன்னல்கள் கடந்து
    பறவைகளாகின்றன விழிகள்..
    இமைச் சிறகசைத்தபடி
    ....//
    அழகு!

    ReplyDelete
  3. எதிரிருக்கைச் சிறுமியின்
    மருதோன்றி நகம் போல
    -arumai gowri.

    ReplyDelete
  4. அழகு கவிதை....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. 2 & 3 - two good! 4 - too good!

    ReplyDelete
  6. கௌரிம்மா, ரொம்ப நல்லா இருக்குடா கவிதைகள் எல்லாம், ரயில் பயணம் போலவே அருமையா

    ReplyDelete
  7. பயணங்கள் யாவிலும்
    சன்னல்கள் கடந்து
    பறவைகளாகின்றன விழிகள்..
    இமைச் சிறகசைத்தபடி
    ....//
    fentastic....congrats.

    ReplyDelete
  8. வாவ்! இரயிலில் வெகுதொலைவு பயணித்த இனிமை உங்கள் வரிகளில்...

    ReplyDelete
  9. narsim, sugirtha, kona, raja sir, karthi sir, lavanya akka, bupesh, punita... thank you :)

    ReplyDelete