15 February, 2011

இன்மையின் திரிபுகள்















பலநூறு சர்ப்பங்கள்
பாலை கடந்ததுவாய்
விழித்திரையில் படரும்
உருவிலிக் காற்றின் பிம்பம்..

யுகங்களாய் மௌனத்துழலும்
நிலவை மொழிபெயர்த்து
கொதிக்கும் வெள்ளியெனக்
குமுறித் தீர்க்கும்
பௌர்ணமிக் கடல்..

நிழலென வீழ்ந்து
நீரின் விரல்பிடித்து
நெடுந்தூரம் சுழன்றோடும்
அசைதல் அறியாத
ஆற்றங்கரை மரத்தண்டு..

பிறப்பின் முதற்கேவலாய்ப்
பெருங்குரலில் குழையும்
நீர் மண்டிய கருப்பைக்குள்
நெகிழ்ந்திசைத்தல் கூடாத
சிசுவின் நுரையீரல்..

பொழியாதும் கலையாதும்
புரண்டலைந்து திரியும்
புயற்காலத்து முகிலுடைகையில்
விழியுடைத்து வழியும்
வெளிப்படுதல் வாய்க்காத
பெருநேசம்..

உருவமும் மொழியும்
அசைவும் குரலும்
வெளிப்படுதலும் வேறெதுவும்
இல்லாத கொடும் வெறுமை
அணுவணுவாய் யாதுமாகும்
கவியொன்றில்.

7 comments:

  1. //விழித்திரையில் படரும்
    உருவிலிக் காற்றின் பிம்பம்..//

    wow

    //பௌர்ணமிக் கடல்..//

    வார்த்தை பிரயோகம் அருமை கௌரி.

    கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //யுகங்களாய் மௌனத்துழலும்

    நிலவை மொழிபெயர்த்து
    கொதிக்கும் வெள்ளியெனக்
    குமுறித் தீர்க்கும்
    பௌர்ணமிக் கடல்..//

    ரசித்தேன்.

    ReplyDelete
  3. .//உருவமும் மொழியும்
    அசைவும் குரலும்
    வெளிப்படுதலும் வேறெதுவும்
    இல்லாத கொடும் வெறுமை
    அணுவணுவாய் யாதுமாகும்
    கவியொன்றில்./

    அசைவற்றது கூட
    இசையாகும் ,
    மனமிசைந்து
    மீட்டும் கவியோன்றில்

    அருமை தோழி.

    ReplyDelete
  4. உருவம் -மொழி-அசைவு-வெளிப்பாடு இவற்றின் இன்மைகளை , கவிமொழியின் உச்சத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ... இன்மைகளை ஒரு கவிதையில் இருத்துதல் என்பது சுவாரசியமான முரண்தான்... வாழ்த்துக்கள் கௌரிப்ரியா...

    ReplyDelete
  5. லாவண்யா அக்கா
    சுகிர்தா
    சந்தான சங்கர்
    Raja

    ஒவ்வொருவருக்கும் நிறைய நன்றிகள் :))

    ReplyDelete
  6. லைன் பை லைன் சூப்பரா இருக்கு :)

    ReplyDelete