30 January, 2010

வீழ்ந்தெழுந்தது


வன்மழைக்குச் சாய்ந்திருந்தது
வழியோரத்து மரம்
இறுதிச் சருகையும் நீத்து..


காலுடைந்த காற்றாடியுடன்
கிளைநுனி பிணைத்தவன்
சில்லென்ற காற்றெங்கும்
சிந்தியபடி சென்றான்
சின்னஞ்சிறு புனைவுகளை...


அன்றைய கனவில்
பூத்துச் சுழன்றது மரம்
கரும்பச்சை, மஞ்சள் மற்றும்
வாடாமல்லி நிறங்களில்.

19 January, 2010

என்றேனும்..



ஆயிரங்கோடி
அரூபச் சிறகு கொண்டு
திசைகள் யாவிலும்
திரிகிறது காற்று..

இங்கு
உலோக அதிர்வுணர்ந்து
குகைவாயிலில் குழுமியுள்ளனர்
குழந்தைகள் சிலர்..

அங்கு
மென்கூட்டின் அசைவுகளை
அவதானித்துக் கிடக்கிறான்
புகைப்படக் கலைஞனொருவன்..

எந்நொடியிலும் வெளிப்படலாம்
இருள் கிழித்து
இங்கொரு இரயிலும்..
இழைகள் உடைத்து
அங்கொரு வண்ணத்துப்பூச்சியும்..

முடிவற்ற பயணத்தின்
முதலசைவுக்கென
மௌனமாய்க் காத்திருக்கும்
காற்றினிரு சிறகுகள்
எந்நொடியிலும் எழும்பலாம்
இங்கிருந்தும் அங்கிருந்தும்..

என்றேனுமவை சந்திக்கக் கூடும்
வளிமண்டலத்தின் ஏதோவோர் அடுக்கில்..
வாய்ப்பிருந்தால் ஒரு கவிதையில்.

12 January, 2010

சிறகின் மேல் பறத்தல்


பரணில் கூடமைக்கும்
பறவையின் சிறகு தொற்றி
படுக்கையறை நுழையும்
பள்ளிக்கூட மதிலோரத்து
இலவின் நினைவு போல்..

கண்ணாடிச் சன்னல் வழி
கடினமின்றி நுழைகிறான்
வண்ணத்துப்பூச்சி துரத்துகையில்
நட்பாகி
வளர்ந்தபின் கடலாடி மரித்தவன்..

அளவிலிச் சிறகசைத்து
அலையும் வண்ணத்துப்பூச்சியென
விரிந்தபடி யிருக்கிறது
விமானத்தின் கீழ் கடல்.


உரையாடல் கவிதைப் போட்டிக்கு.

05 January, 2010

கிளை பற்றும் அணில் குஞ்சு


மார்கழி முன்னிரவில்
பனியொழுகும் தலைகளுடன்
படர்ந்திருக்கின்றனர் மக்கள்
கண்காட்சி யொன்றில்..
ஏந்தியவன் கழுத்தின்
இருமருங்கிலும் கால்களிட்டு
தோளமர்ந்திருக்கிறது குழந்தை.....
தந்தையின் கற்றைமுடியை
இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
காற்றிலாடும் செடியொன்றின்
கிளை பற்றிய அணில்குஞ்சென
மிருதுவாய் இருக்கக்கூடும்...

கவியொழுகும் தலையுடன்
கடந்து செல்கிறான்
கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்.