22 March, 2009

தேய்பிறைகள் தித்திக்கும்


உயர்கல்வித் தேர்வொன்றின்
உக்கிரத்தில் துவண்டபின்
தொடர்வண்டிப் பயணத்தில்
துவங்கியதோர் இரவில்
தேய்பிறையைத் தோல்வியென
உருவகித்துறங்கினேன்..

மறுநாள் விடியலின் மலைக்குகைப் பாதையில்
மருண்டு மீண்டநொடியிலவள்
மழலை விழியுடன் சிநேகித்தேன்..

வழிதோறும் ஆடுகளைக் கம்பளிக்கும்
மின்கம்பிக் காக்கைகளை மைகேட்டும்
உத்தரவுக் கவிதை சில

உச்சரித்தாள்...
மடிக்கணினியில் லயித்திருந்த
பெற்றோரின் விழிதப்பி
சன்னல் வழி நீண்டதவள்
பிஞ்சுக்கை தீண்டவென
பெய்து தீர்த்ததொரு சிறுமேகம்.

தரைதுடைத்த சிறுவனிடம்
அவள் நீட்டிய மிட்டாயின் நிறம்கடத்தி
அந்திவானம் நெய்தது
அடர்மஞ்சளாடையொன்றை..

சிறுகை விரித்து சிறகுகள் பரப்பி
தேவதைக் கதைகள் செப்பியபின்
மயிற்பீலி ஒன்றைஎன் புத்தகம் நுழைத்து
குட்டிகள் ஈனுமென வரமளித்தாள்..

அவள் சிந்திய ஆங்கிலத்தில்
வைரமான விண்மீன்கள் சூழ
பாதியவள் உண்டுவைத்த
பால்சோற்றுக் கிண்ணமொத்து
எழுந்துவந்த தேய்பிறை முன்
என் எழுதுகோல் முகிலாகி
காகிதப் பரப்புகளில்
கவிதை தூறத்தொடங்கியது

6 comments:

  1. நல்ல கவிதைச் சாரல்!!!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. //பிஞ்சுக்கை தீண்டவென
    பெய்து தீர்த்ததொரு சிறுமேகம்.//

    அழகிய தூறல்...

    ReplyDelete
  3. @ அருணா, புதியவன்

    மிக்க நன்றி உங்களின் கருத்துகட்கு

    ReplyDelete