02 June, 2009

கனவின் அல்லிப் பதியன்கள்



துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...

சந்திப்பின் முடிவில்
பசுமையினிழைகளோடும்
வெண்பட்டுக் கூம்பென
விரிந்திராத மொட்டினைக்
கொடுத்துப் போகிறாய்
குழந்தையின் முறுவலுடன்..

அல்லியை விடவும்
அழகாயிருக்கிறது
அதன் தண்டு...
ஈரம் பொதிந்ததாய்..
இதழினும் பளபளப்பாய் ..
இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

தாயின் இடுப்பினின்று
தரையிறங்க நழுவுமோர்
மழலையின் துள்ளலுடன்
மலர்த்தண்டினின்று
மண்நோக்கி வீழ்கின்றன
நீர்த்துளிகளுடன் சில
கவிதைகளும்..

விடியலின் மின்தடைக்கு
விழி திறக்கையில்
எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் கீழ்
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லித்தாளுக்கு...

ஒப்புமையின் உக்கிரம் தாளாது
உள்ளத்தின் பதியன்களை
அழுகையடக்கி அறுத்தெறிகையில்
அடித்தண்டில் சேறென
அப்பிக்கிடக்கும் வலியை
அகற்றும் திறனில்லை
எனக்கு.

22 comments:

  1. எப்டி தான் இப்டி எல்லாம் எழுதுவிங்களோ.. ரொம்ப நல்லா இருக்கு.. அப்துல்லா மாமா பதிவுல போட்டிருக்கிற கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. //ஒப்புமையின் உக்கிரம் தாளாது
    உள்ளத்தின் பதியன்களை
    அழுகையடக்கி அறுத்தெறிகையில்
    அடித்தண்டில் சேறென
    அப்பிக்கிடக்கும் வலியை
    அகற்றும் திறனில்லை
    எனக்கு.//

    மிக அருமையான வரிகள் !

    ReplyDelete
  3. ஆத்தி!! இங்குட்டு வரவே பயமா இருக்கு.

    :))

    ReplyDelete
  4. ///தாயின் இடுப்பினின்று
    தரையிறங்க நழுவுமோர்
    மழலையின் துள்ளலுடன்
    மலர்த்தண்டினின்று
    மண்நோக்கி வீழ்கின்றன
    நீர்த்துளிகளுடன் சில
    கவிதைகளும்..///

    கவிதைக்குள் ஒரு கவிதை என்றால் இது தானோ?!
    என்ன ரசனையான வரிகள்...

    ReplyDelete
  5. //தாயின் இடுப்பினின்று
    தரையிறங்க நழுவுமோர்
    மழலையின் துள்ளலுடன்
    மலர்த்தண்டினின்று
    மண்நோக்கி வீழ்கின்றன
    நீர்த்துளிகளுடன் சில
    கவிதைகளும்..//

    உவமை அழகு ப்ரியா..இரசித்தேன் :-)

    ReplyDelete
  6. //இதயத்தில் பதியனிட ஏதுவாய்..//

    அட அவ்வளவு அழகு.. :-)

    ReplyDelete
  7. நல்ல தமிழ் நடை ...
    வாழ்த்துக்கள்.
    வாழட்டும் தமிழ்

    ReplyDelete
  8. அல்லியை பார்க்கும் போது மட்டும்
    கருவிழியை கழற்றி வைத்து விட்டு நிலாவை பொருத்திக்
    கொண்டீர்களோ?
    நிலாப் பார்வை இக்கவிதை....

    பிரிவின் மென்வலியை
    மெழுகின் உடல் கொண்ட தண்டில் ஏற்றி ,
    வலியில் முளைக்கும் வரிகள் இவை
    என்பதை தண்டின் அடியில் அப்பிக்கொண்டிருக்கும் சேற்றில் முளைக்கும் என்று முடித்திருக்கும் உங்கள் திறனுக்கு
    வாழ்த்துக்கள் ..!
    - நேசமித்ரன்
    http://nesamithran.blogspot.com/

    ReplyDelete
  9. $anjaiGandh!
    ரிஷான் ஷெரீப்
    எம்.எம்.அப்துல்லா
    சுமஜ்லா
    புனிதா
    நர்சிம்
    Raghavendran D
    Vinitha
    மயாதி
    NESAMITHRAN

    உங்களின் வருகைக்கும் கருத்துகட்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பர்களே

    ReplyDelete
  10. //அல்லியை விடவும்
    அழகாயிருக்கிறது
    அதன் தண்டு...
    ஈரம் பொதிந்ததாய்..
    இதழினும் பளபளப்பாய் ..
    இதயத்தில் பதியனிட ஏதுவாய்....
    **
    தாயின் இடுப்பினின்று
    தரையிறங்க நழுவுமோர்
    மழலையின் துள்ளலுடன்
    மலர்த்தண்டினின்று
    மண்நோக்கி வீழ்கின்றன
    நீர்த்துளிகளுடன் சில
    கவிதைகளும்..//

    அழகு!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  11. அருமையான கவிதை. வரிக்கு வரி ரசித்தேன். உங்களது மற்ற கவிதைகளையும் வாசித்துவிடுகிறேன்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  12. //மண்நோக்கி வீழ்கின்றன
    நீர்த்துளிகளுடன் சில
    கவிதைகளும்//
    இது ரொம்ப அழகு.....

    ReplyDelete
  13. கௌரி மேடம்,

    எழிற்கூம்பின் வடிவொத்து
    எரிசுடரின் வடிவொத்து
    உருகும் மெழுகினுடல்
    உவமையாகிறதென்
    அல்லிதாளுக்கு

    இது கம்பம் பாடாத சிந்தனை. மிக ரசித்தேன். எல்லா கவிதைகளுமே நன்றாக இருக்கின்றது.

    என்னுடைய மின்னல்பக்கம் உயிரோடை ஆகவிட்டது.

    ReplyDelete
  14. மடலிடுங்களேன் uyirodai@gmail.com

    எல்லா கவிதையும் படிக்க வேண்டும் கொஞ்சம் டைம் ப்ளீஸ்.

    அன்புடன்
    உயிரோடை லாவண்யா

    ReplyDelete
  15. எல்லாக்கவிதையும் அருமையா இருக்கு!

    ReplyDelete
  16. //அல்லியை விடவும்
    அழகாயிருக்கிறது
    அதன் தண்டு...
    ஈரம் பொதிந்ததாய்..
    இதழினும் பளபளப்பாய் ..
    இதயத்தில் பதியனிட ஏதுவாய்....//

    எல்லா கவிதைகளும் அழகு என்றாலும்
    இது மிக அழகு...

    ReplyDelete
  17. சேரல்
    "அகநாழிகை"
    உயிரோடை லாவண்யா
    முதல் வருகையும் கருத்துகளும் ஊக்கமளிக்கின்றன..
    மனமார்ந்த நன்றிகள்.



    @அருணா
    சென்ஷி
    புதியவன்
    கருத்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  18. அருமை. இதுவே வலைக்கு முதல் வருகை. அனைத்தையும் வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது.

    வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  19. //ஒப்புமையின் உக்கிரம் தாளாது
    உள்ளத்தின் பதியன்களை
    அழுகையடக்கி அறுத்தெறிகையில்
    அடித்தண்டில் சேறென
    அப்பிக்கிடக்கும் வலியை
    அகற்றும் திறனில்லை
    எனக்கு.//

    excellent...you made me to feel the pain on your words...even i dont want to close your blog page from yesterday..just hibernating my laptop to keep your blog opened till i read all of your posts :-)

    ReplyDelete
  20. "கனவின் அல்லிப் பதியன்கள்" மிக பிரமாண்டமாய் கட்டப்பட்ட வீட்டை, என்னால் ரசிக்க மட்டும் முடிகிறது..?

    ReplyDelete