27 May, 2009

ஒரு வானவில்லின் மரணம்



அதுவோர் கார்காலம்..
அம்மன் கோயிலில் திருவிழா..
பள்ளி மறந்த பட்டாம்பூச்சிகள்
பஞ்சுமிட்டாய்களை மொய்த்திருக்க..
ஒற்றைக் கழியில் கடைவிரித்த
உள்ளூர் அண்ணாச்சியின்
உயிர்வளியின் எச்சங்கொண்டு
உடல் பருத்தன பலூன்கள்..

மேற்குக் காதலனின் கதிர்கண்டு
மழைக் காதலி உதிர்த்த புன்னகைக்கு
கிழக்கில் சிறிதாய்க் கொண்டாட்டம்..
சன்னல்வழி வானவில் பருகினோம்
உறவுக்காரச் சிறுமியும் நானும்.
முகந்தெரியாத குழந்தையின் பட்டம்
முத்தமிட முனைந்தது வானவில்லை...

'நாளைய தேர் விழாவில்
எந்தச் சாதிக்கு முதல்மரியாதை'
கலவரம் கக்கிய கேள்வியென்
காதடையும் முன்னரே
கண்ணீர்ப்புகை சன்னல் மறைக்க ..
செவிக்குள் நுழைந்த சிற்றெறும்பாய்
சிறுமியின் புலம்பல் குடைந்தது
'வானவில் புகையில் மறஞ்சு போச்சுக்கா'..

வண்ணத்துப் பூச்சிகளின் நாவில்
வண்ணமெழுதா மிட்டாய்களுடன்
வயிறுடைந்த பலூன்களும்
வருந்திச் சுருங்கின..
வானவில் தொடாத வாலறுந்த பட்டம்
வீதியோரத்து வேம்பின் கிளையிடம்
வெறுமைக் கதை செப்புகையில்
முடிந்து போயிருந்தது கலவரம்...

மறுநாள்..
சாமிகுத்தம் தவிர்க்க
ஏதோவொரு சாதி
தேரிழுத்தது...
அம்மனுக்குப் படைத்த
சர்க்கரைப் பொங்கல்
இனித்ததா என்றெனக்கு
ஞாபகமில்லை.

12 comments:

  1. ungal paadu porul
    sor prayogam ie.,uyirvali

    padimangal , thoni
    ie.,otrai kaliyil kadai viritha

    arumai

    Vaazhthukkal

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளுக்கு கருத்துச் சொல்லும் அளவிற்கு கவிதைகள் பற்றி ஒன்றுமறியேன்..வாசித்து விட்டு போய்விடுகிறேன்.
    .
    .
    .அற்புதம்.

    ReplyDelete
  3. //உயிர்வளியின் எச்சங்கொண்டு
    உடல் பருத்தன பலூன்கள்..//

    //வானவில் தொடாத வாலறுந்த பட்டம்//

    கவிதை மொத்தமாய் சிறப்பு...எளிய சிந்தனை, ஆழமான சொல்லாடல்...சிறப்பு..
    http://spggobi.blogspot.com/

    ReplyDelete
  4. உங்கள் கவிதைகள் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

    மேற்குக் காதலனின் கதிர்கண்டு
    மழைக் காதலி உதிர்த்த புன்னகைக்கு
    கிழக்கில் சிறிதாய்க் கொண்டாட்டம்..
    சன்னல்வழி வானவில் பருகினோம்
    உறவுக்காரச் சிறுமியும் நானும்.
    முகந்தெரியாத குழந்தையின் பட்டம்
    முத்தமிட முனைந்தது வானவில்லை..

    பிடித்த வரிகள்..

    ReplyDelete
  5. ////வண்ணத்துப் பூச்சிகளின் நாவில்
    வண்ணமெழுதா மிட்டாய்களுடன்
    வயிறுடைந்த பலூன்களும்
    வருந்திச் சுருங்கின..
    வானவில் தொடாத வாலறுந்த பட்டம்////


    அற்புதம்....



    ///அம்மனுக்குப் படைத்த
    சர்க்கரைப் பொங்கல்
    இனித்ததா என்றெனக்கு
    ஞாபகமில்லை.//

    :)

    ReplyDelete
  6. கவிஞன், நர்சிம், கோபிநாத், சந்த்ரு, ஜீவன்......... வருகைக்கும் கருத்துகட்கும் நன்றி

    ReplyDelete
  7. //அண்ணாச்சியின்
    உயிர்வளியின் எச்சங்கொண்டு
    உடல் பருத்தன பலூன்கள்..//
    அருமை :)

    ReplyDelete
  8. கவிதையின் வரிகளும் களமும் எனக்கு மிகவும் புதிது..அருமையான சொல்லாடல் :-)

    ReplyDelete
  9. குமார்
    புனிதா
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. செவிக்குள் நுழைந்த சிற்றெரும்பாய்....

    என்ன உவமைப்பா

    ReplyDelete
  11. //பள்ளி மறந்த பட்டாம்பூச்சிகள்
    பஞ்சுமிட்டாய்களை மொய்த்திருக்க..//

    மிகவும் ரசித்த வசிகள்...

    ReplyDelete
  12. //வண்ணத்துப் பூச்சிகளின் நாவில்
    வண்ணமெழுதா மிட்டாய்களுடன்
    வயிறுடைந்த பலூன்களும்
    வருந்திச் சுருங்கின..
    வானவில் தொடாத வாலறுந்த பட்டம்
    வீதியோரத்து வேம்பின் கிளையிடம்
    வெறுமைக் கதை செப்புகையில்
    முடிந்து போயிருந்தது கலவரம்...//

    வியக்க வைக்கும் வார்த்தைகள்...அருமை...

    ReplyDelete