19 April, 2009

புதிதும் பழையதும்

என்னைப் பெற்றவளின்
ஏழாவது பிள்ளை என்
இடுப்பிருந்து நழுவுகையில்
சிவப்பொளிக்குப் பணிந்தது
சீறி வந்த மகிழுந்து..

சன்னல் கண்ணாடி இறக்கி
சாலையை வெறித்த மனிதர்
சட்டைப்பைக்குள் கைவிட
சட்டெனப் பூத்ததென் மனது.

"இவரும் இவரைப்போல்
இன்னும் நாலு பேரும்
இரக்கம் கொண்டு ஈந்திட்டால்
இரண்டு நாள் உலர்ந்த வயிறு
ஈரம் கண்டு உறங்கப் போகும்"

ஏளனப் புன்னகையுடன்
எதையோ அவரெடுத்து
இதழிடுக்கில், விரலிடுக்கில்
வைத்தெடுத்து, புகைவிடுத்து
விளையாடத் தொடங்குகையில்...

புதிதாய் உணர்ந்து கொண்டேன்
புகையிலை கருகும் வாசம்- உடன்
புன்னகை கருகும் வாசமும்...
பின்னது எனக்குப் புதிதல்ல.

3 comments:

  1. //புதிதாய் உணர்ந்து கொண்டேன்
    புகையிலை கருகும் வாசம்- உடன்
    புன்னகை கருகும் வாசமும்...
    பின்னது எனக்குப் புதிதல்ல.//

    வலி நிறைந்த வார்த்தைகள்...

    ReplyDelete
  2. @ புதியவன்
    நன்றிகள் பல

    ReplyDelete