30 April, 2009

எதுகை தேடுங்கள்..


கருவுற்றிருக்கும் மயிலிறகு..

கசங்கியதோர் காகிதக்கப்பல்..

கடற்கரையில் கண்டெடுத்த

நட்சத்திர மீன்கூடு..

அழிப்பானின் மூலப்பொருளாய்

அறியப்படும் பென்சில்சீவல்..

மணலில் புரண்டெழுந்து

பேய்முடியீனும் காந்தத்துண்டு..

செந்நிறக் கிளிஞ்சலென

குல்மொஹர் இதழொன்று..

காணும் பொங்கலன்று

தாத்தா தந்த பத்துரூபாய்..

விழுகையில் உடைந்ததும்

உடையாது விழுந்ததுமாய்

முன்வரிசைப் பற்களிரண்டு..

மேசைக்கரண்டியினின்று

இடம்பெயராத எலுமிச்சைக்கு

பள்ளியில் தந்த பதக்கமொன்று..


யாவுமிருக்கும் பென்சில் பெட்டியைப்

பற்கள் கொண்டு நான்

பாங்காய்த் திறப்பதைப்

பரவசமாய்ச் சிலாகித்து

எழுதித் தீர்க்கும் நீங்கள்..

விலையுயர்ந்த மிட்டாயின்

வண்ணம் மங்கிய காகிதத்தை

மறவாமல் எழுதுங்கள்- அத்துடன்..


தனித்தென்னைத்

தின்னச் செய்கையில்

தாயின் கால்கள் பின்நின்று

வேலைக்காரியின் பிள்ளை

விழிமுனையில் சிந்திய

ஏக்கப் பார்வைக்கும்

எதுகை தேடுங்கள்..


வளர்ந்துவிட்ட உங்களுக்கு

வார்த்தை கிடைக்காமலா

போய்விடும்??


http://youthful.vikatan.com/youth/gowripoem090509.asp

29 April, 2009

விழியற்றவனின் முகில்

கருவுற்றிருந்த வானின்
கருமையும் களிப்பும் தாங்கி
கதைத்திருந்த கடலின்
கரையிலென்னுடன் சிநேகமானான்
கார்காலத்துக் காலையொன்றில்....

மூங்கில் துளைவழி
மணல்வெளியெங்கும்
ஊற்றித் திளைத்தான்
உயிரின் கரைசலை....

விடியல்களில் வெறுமைக்கும்
வெயில்சாய்கையில் வறுமைக்கும்
மருந்தாகும் குழல்காண மட்டும்
மறுபிறவி வேண்டுமென்றான்...

கூடுடைத்துப் புறப்படும்
வண்ணத்துப்பூச்சியாய்...
ஓடுடைத்து வெளிவரும்
குயிலொன்றின் குழந்தையாய்...
விளைநிலம் பிளந்து
விதையொன்று துளிர்ப்பதாய்..
குழலிசைக்கு நான்செய்த
ஒப்புமைகள் புறக்கணித்தான்...

முகிலொத்தது குழலென்றும்
மழையொத்தது இசையென்றும்..
காலைகளில் முகில்குளிர்ந்தும்
மாலைகளில் முகில்பிழிந்தும்
பொழிவதாய் உவமைகளில்
புதுமை சொன்னான்..

பின்வந்ததோர் பேரிடி நாளில்
விபத்திலவன் மரித்தபின்னர்
முகிலுரியப்பட்ட வானின்
மௌனம் தாளாமல்
கடற்கரை தவிர்த்தும்...

பயணங்கள் யாவிலும்
தொடர்வண்டியின் உட்கூரையைக்
கடந்து போகின்றன
குளிராது பொழியும்
முகில்கள்...

21 April, 2009

மருதோன்றி இரவொன்றில்..

உன் நேசம் அளக்கும்

உள்ளங்கை மருதோன்றி

சிவந்திராத காலைகளில்

உடைந்தழும் என்னிடம்

பவழமல்லிக் காம்பும்

புலர்வானின் நிறமும்

அடர்சிவப்பினும் அழகென்று

ஆறுதல் சொன்னாய்...


பிரியங்கள் பிளவுண்ட இந்நாளில்

பின்னிரவின் உறக்கம் உறிஞ்சி

உலராதிருக்கும் மருதோன்றி

உன் நினைவின் ஈரங்களை

உள்ளங்கை நரம்புகளில்

ஓயாமல் எழுதுகையில்

தனித்திருக்கும் எதுவும்

நட்பாகிவிடுகிறதெனக்கு...


ஒற்றையாய் நட்டவன் மேல்

ஊமைக் கோபமும்..

விரிந்திடும் விதியற்ற

வேரின் வியர்வையும்..

தொட்டிச் செடியொன்றின்

பூவிதழில் துளிர்க்கிறது..


கொல்லைக் கிணற்றில்

கொதிக்கும் பாதரசமாய்க்

குழைந்து நெளியும் நிலவும்..

சிறுவர் வண்டியில்

சேர்க்கப்படாது

தனித்து மிதக்குமோர்

நுங்குக் குவளையும்..

தத்தம் வெறுமையைத்

தமக்குள் பகிர்கின்றன...


கடந்து போன பூனையின்

கால் எதையோ இடறிட..

அலைகள் மறுக்கப்பட்ட

ஆழியின் துயரத்தை

உப்பளத்து நீருமிழ்ந்த

உவர்ப்புத் துகள்கள்

உடைந்த குடுவையிடம்

உரத்துக் கூற....


மனதின் இறுக்கத்தில்

மறுகாது தப்பிட

நுணுங்கி விரியும்

நுரையீரல் பூக்களின்

நீள்மூச்சுக் கூட்டங்கள்

அளந்து தோற்கின்றன

இவ்விரவின் நீளத்தை..


வியப்புகள் கொணரும் விடியலில்..

காட்சிப் பிழையொன்றின்

சாத்தியங்கள் களைந்த பின்பும்

குங்குமமாய்ச் சிவந்திருந்த

கைகளுக்குள் அழுகிறேன்

அளந்திட ஏதுமற்று...


http://youthful.vikatan.com/youth/gowripriyapoem23042009.asp

நன்றி: விகடன். காம்

19 April, 2009

வலி



மழையாடி உயிர் நனைந்த

மழலையிடம் சினங்கொண்டு

கதவடைத்த பெற்றோர்முன்

மனம் வெதும்பிய பிள்ளையின்

கடைவிழிநீர் காணும்வரை

குடைக்கம்பிகள் குத்தியதும்

வலித்ததில்லை மழைக்கு..

நானறிவேன்,அன்று முதல்

எவருமறியாமல் வந்து

இரவுகளின் வெறுமை மட்டும்

இருட்டில் நனைக்கிறது மழை..

புதிதும் பழையதும்

என்னைப் பெற்றவளின்
ஏழாவது பிள்ளை என்
இடுப்பிருந்து நழுவுகையில்
சிவப்பொளிக்குப் பணிந்தது
சீறி வந்த மகிழுந்து..

சன்னல் கண்ணாடி இறக்கி
சாலையை வெறித்த மனிதர்
சட்டைப்பைக்குள் கைவிட
சட்டெனப் பூத்ததென் மனது.

"இவரும் இவரைப்போல்
இன்னும் நாலு பேரும்
இரக்கம் கொண்டு ஈந்திட்டால்
இரண்டு நாள் உலர்ந்த வயிறு
ஈரம் கண்டு உறங்கப் போகும்"

ஏளனப் புன்னகையுடன்
எதையோ அவரெடுத்து
இதழிடுக்கில், விரலிடுக்கில்
வைத்தெடுத்து, புகைவிடுத்து
விளையாடத் தொடங்குகையில்...

புதிதாய் உணர்ந்து கொண்டேன்
புகையிலை கருகும் வாசம்- உடன்
புன்னகை கருகும் வாசமும்...
பின்னது எனக்குப் புதிதல்ல.

மழைக்கனவு



மயிலிறகு சேகரிக்கும் சிறுவராய் மாறி
மரக்கிளைகள் ஆர்ப்பரிக்கக் கூடும்...

உச்சாணிக்கிளை முதல் ஊசிவேர் ஈறாக
உவகையில் ஊறிடவும் கூடும்...

தூக்கனங்குருவிகள் தூவும்மழை ருசிக்க
வான்நோக்கி வாய்திறக்கக் கூடும்...

மரம்நீத்த சருகுகள் மழைமணம் தாங்கிய
மண்ணுடன் மையல் கொள்ளக்கூடும்...

சிற்றிலை மடியுறங்கும் சிரைகள்
சிலிர்த்துகண் விழித்திடவும் கூடும்...

அடுக்குமாடிக் குடியிருப்பின்ஆறாவது தளத்தில்
அட்டைப்பெட்டிக்குள் அடைகாக்கும்
சிட்டுக்குருவியின் கனவில்..

மழையெனும் மாமொழியின்
மழலைக் குரல் தாங்கி
தூறல் தரையிறங்கும் வேளை

15 April, 2009

கடல்சாரா நெய்தல்


வட்டமாய் வெட்டுண்ட வானம்..
குவளையின் வடிவொத்துக்
குறுகிய நீர்வெளி....
வாய்முதல் வால் வரை
அணுக்கள் அனைத்திலும்
அப்பிய மௌனம்..
முதல் முடிவற்ற வட்டப்பாதையில்
வழித்துணை ஏதுமற்று
தனித்துழலும் வேளை..
ஈராயிரம் விசாரிப்புகள் தாங்கி
இல்லத்து வெளிச்சுவர் பதியும்
மழலையின் நுனிவிரல் ரேகைகளில்
மறைந்திருக்கக் கூடுமோர்
மொழியற்ற கவிதையின் முதலிழை..
கண்ணாடிக் குவளையுள்
கடல்சாரா மீனின்
கவி நெய்தலிலுண்டு
புரிதலின் எல்லைகள் கடந்த
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

நன்றி:உயிர்மை

03 April, 2009

..........


விழிகள் விரித்து
விற்புருவம் உயர்த்தி
மாயக் கதை கேட்ட
மழலையின் நெற்றியை
இருநொடிகள் பகுத்துப் போகும்
எழில்மிகு சுருக்கங்களொத்து
செவ்வகத் துண்டுகளாய்ச்
செவ்வானைப் பிரித்திருந்த
சன்னலின் குறுக்குக் கம்பிகளில்...
அனுமதி கோராது
அறையுள் பிரவேசித்த
அறிமுகமற்ற மரமொன்றின்
அழகிய சருகின் நுனி
எழுதிப் போனது
இக்கவிதையை.

01 April, 2009

வெங்காயம் சமையலுக்கில்லை

வெண்டைப் பொரியலில் சேர்த்த
துருவிய தேங்காய் ஏனோ
தும்பைகள் பூத்த புல்வெளியாய்த்
தோன்றிய நொடியில்தான்
வாணலியின் விளிம்புகள் தாண்டி
வந்து குதித்ததொரு கவிதை..

அடுக்களை வெறுத்து
அடைக்கலம் ஆனது
அழிப்பான் உற்பத்திக்கு
அன்புமகள் சேகரிக்கும்
கூம்புகளாய்ச் சுருண்டிருந்த
பென்சிலின் துருவலுக்குள்....

அலுவலகக் கவலைகளில்
அமிழ்ந்திருந்த இரவில் மீண்டும்
ஆள்காட்டி விரல் வந்து
அமர்ந்திருந்த கவிதை
"எப்போது என்னை
எழுதுவாய்" என்றதும்
ஐந்தறைப் பெட்டிக்குள் அதை
அலுப்புடன் அடைத்தேன்..

அடுத்த விடியலின்
அவசரப் பொரியலில்
அவரையுடன் தீய்ந்தன என்
கவிதைத் துருவல்கள்...

பிழை எனதுதான்..
பென்சில் பெட்டியில் அது
பிழைத்திருக்கக் கூடும்..
விழிநீரின் காரணம்
விளக்கிட விரும்பாமல்
வெங்காயம் நறுக்கத் தொடங்கினேன்
.